இனி தமிழகத்தில் அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் ஒரே ஷிப்ட் முறை வகுப்புகள் நடைபெறும் என அரசாணை வெளியீடு!! - ஆசிரியர் மலர்

Latest

29/07/2020

இனி தமிழகத்தில் அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் ஒரே ஷிப்ட் முறை வகுப்புகள் நடைபெறும் என அரசாணை வெளியீடு!!


தமிழகத்தில் 50 அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் 2 ஷிப்ட் முறை ஒரே ஷிப்ட் முறையாக மாற்றப்பட்டுள்ளதாக தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. தமிழ்நாட்டிலுள்ள அரசு கலை மற்றும் அறிவியியல் கல்லூரிகளில் மாணவர்கள் அதிக அளவில் பயில்கின்றனர். தமிழ்நாட்டில் மொத்தம் 114 அரசுக் கல்லூரிகள் செயல்பட்டு வருகின்றன. இதில் 65-க்கும் மேற்பட்ட கல்லூரிகளில் காலை, மாலை என்று இரு ஷிப்ட் முறைகள் பின்பற்றப்பட்டு வருகின்றன.மாணவர்கள் அதிக அளவில் இருப்பதால் காலை, மாலை என இரண்டு பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டு பாடம் நடத்தப்பட்டு வருகிறது. இதில் காலை வகுப்புகள் காலை 8:45 மணிக்குத் தொடங்கி பிற்பகல் 1:15 மணிக்கு முடிவடைகிறது. மாலை வகுப்புகள் மதியம் 1:30 மணிக்குத் தொடங்கி மாலை 6.30 மணி வரை நடைபெறுகிறது.

காலை நேர வகுப்புகளில் நிரந்தர விரிவுரையாளர்கள், பேராசிரியர்கள் பணிபுரிந்து வருகின்றனர். மாலை நேர வகுப்பில் 1,661 கௌரவ விரிவுரையாளர்கள் தொகுப்பூதிய அடிப்படையில் பணிபுரிந்து வருகின்றனர். காலை நேர வகுப்புகளை ஒப்பிடுகையில் மாலையில் குறைந்த அளவிலான மாணவர்கள் மட்டுமே பயின்று வருகின்றனர்.மாலை வகுப்புகள், காலை வகுப்புகள் நேர வேறுபாடு காரணமாக மாணவர்களுக்குக் கல்வி கற்பதற்கு போதுமான நேரம் இல்லாமல் இருப்பதாகக் கருதப்படுகிறது. எனவே இரண்டு ஷிப்ட் முறை என்பதை மாற்றிவிட்டு ஒரே ஷிப்ட்டாக காலை மட்டுமே வகுப்பு நேரம் என்கின்ற முறையினை அரசுக் கல்லூரிகளில் அறிமுகப்படுத்த உயர் கல்வித் துறை முடிவு செய்துள்ளது.

காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை இந்த வகுப்புகள் நடத்தப்படவுள்ளன.இந்த முறையைச் செயல்படுத்தும்போது மாணவர்களின் எண்ணிக்கை கூடும். இதற்கு ஏற்ப மாணவர் எண்ணிக்கை அதிகமிருக்கும் கல்லூரிகளில் மாணவர் எண்ணிக்கைக்கு ஏற்ப வகுப்பறைகள் உள்ளிட்ட உள்கட்டமைப்பு வசதிகளை அரசு ஏற்படுத்தித் தர வேண்டும்.கூடுதலாகத் தேவைப்படும் வகுப்பறைகளின் விவரங்கள், மற்ற வசதிகள் குறித்து விவரங்களை அளிக்க வேண்டும் என அரசு கலை மற்றும் அறிவியியல் கல்லூரிகளின் முதல்வர்களிடம் கேட்கப்பட்டுள்ளது. எனவே, உட்கட்டமைப்பு வசதிகள் உருவானதும் அரசு கல்லூரிகளில் வரும் கல்வியாண்டில் ஒரே ஷிப்ட் முறை அறிமுகப்படுத்தப்பட்டு காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை வகுப்புகள் நடத்தப்படவுள்ளன.

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459