560 பல்கலைக்கழகங்கள் செமஸ்டர் தேர்வு நடத்துவதற்கு ஆதரவு - ஆசிரியர் மலர்

Latest

18/07/2020

560 பல்கலைக்கழகங்கள் செமஸ்டர் தேர்வு நடத்துவதற்கு ஆதரவு

டெல்லி; கொரோனா தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் கடந்த மார்ச் மாதம் முதல் பள்ளி, கல்லூரிகள் என அனைத்து கல்வி நிறுவனங்களும் மூடப்பட்டன. இதையடுத்து, பல்வேறு மாநிலங்களும் பள்ளி தேர்வுகளை ரத்து செய்துள்ளன.  கல்லூரிகளை பொறுத்தவரை, கடந்த மார்ச் மாதம் நடக்க இருந்த பல்கலைக்கழக தேர்வுகள் அனைத்தும் ஒத்தி வைக்கப்பட்டன. இருப்பினும், இந்த பருவத்தில் நடத்தப்பட வேண்டிய கல்லூரி, பல்கலைக்கழக பருவத் தேர்வுகள் கட்டாயம் நடத்த  வேண்டும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.
ஊரடங்கு தற்போது தளர்த்தப்பட்டுள்ளதை தொடர்ந்து, பல்கலைக்கழகங்கள், உயர்கல்வி நிறுவனங்கள் தேர்வுகளை நடத்த மத்திய அரசு அனுமதி வழங்கி உள்ளது. பல்கலைக்கழக மானியக்குழு விதிமுறைப்படி, இறுதியாண்டு தேர்வுகள்  கட்டாயம் நடத்தப்பட வேண்டும். இறுதியாண்டு மாணவர்களின் இறுதி செமஸ்டர்களை, கல்லூரிகளும் பல்கலைக்கழகங்களும் செப்டம்பர் மாத இறுதிக்குள் ஆன்லைன் அல்லது ஆஃப்லைன் முறையில் நடத்தி முடிக்க வேண்டும். தேர்வின்  போது முன்னெச்சரிக்கை வழிகாட்டு நெறிமுறைகள் பின்பற்றப்பட வேண்டும் என்றும் மத்திய அரசு வலியுறுத்தியுள்ளது.
இதற்கிடையே, பருவத் தேர்வுகள் நடத்துவது குறித்து பல்கலைக்கழகங்களிடம் பல்கலை. மானியக்குழு கருத்து கேட்டது. இந்நிலையில், எழுத்து தேர்வு குறித்து பல்கலை. மானியக்குழு கருத்து கேட்டதற்கு இதுவரை 755 பல்கலைக்கழகங்கள்  பதிலளித்துள்ளதான யுஜிசி தெரிவித்துள்ளது. அதில், 560 பல்கலைக்கழகங்கள் தேர்வு நடத்துவதற்கு ஆதரவாக கருத்து தெரிவித்துள்ளன. பதிலளித்த 755 பல்கலைக்கழகங்களில் 194 பல்கலை. ஏற்கனவே தேர்வை நடத்தி முடித்துள்ளன. மேலும், 366 பல்கலைக்கழகங்கள் ஆகஸ்ட் அல்லது செப்டம்பரில் தேர்வு நடத்த திட்டமிட்டுள்ளதாகவும் யுஜிசி தகவல் தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459