+ 2 ரிசல்ட் : அமைச்சருக்கே, சர்ப்ரைஸ் தேர்வுத் துறை இயக்குநரகம் பெரும் குளறுபடி - ஆசிரியர் மலர்

Latest

17/07/2020

+ 2 ரிசல்ட் : அமைச்சருக்கே, சர்ப்ரைஸ் தேர்வுத் துறை இயக்குநரகம் பெரும் குளறுபடி


பிளஸ் 2 ரிசல்ட் அறிவிப்பில், தேர்வுத் துறை இயக்குநரகம் சரியாக திட்டமிடாததால், தேர்வுத் துறை இயக்குநரை மாற்ற, பள்ளி கல்வித் துறை செயலகம் திட்டமிட்டுள்ளது.

தமிழகத்தில், பிளஸ் 2 தேர்வுகள், மார்ச், 24ல் முடிந்தன; மே, 27ல், விடைத்தாள் திருத்தம் துவங்கி, ஜூன் இரண்டாவது வாரத்தில் முடிந்தது. ஜூன் நான்காம் வாரத்தில் மதிப்பெண் பட்டியல் தயாரானது.இதற்கான பணிகளை, பள்ளி கல்வி இயக்குநரகம் வழியாக, முதன்மை கல்வி அதிகாரிகளும், முதுநிலை பட்டதாரி ஆசிரியர்களும் திட்டமிட்டபடி முடித்தனர். இயக்குநரகம் இழுபறிபின், தேர்வு முடிவுகளை, ஜூலை முதல் வாரத்தில் வெளியிட, பள்ளி கல்வி அமைச்சகம் திட்டமிட்டது. ஆனால், மார்ச், 24ல், சில மாணவர்கள் தேர்வு எழுதாத நிலையில், அவர்களுக்கு மறுதேர்வு நடத்தாமல், முடிவை வெளியிட முடியாது என, தேர்வுத் துறை இயக்குநரகம் திடீரென பின்வாங்கியது.

இந்நிலையில், தமிழக பள்ளி கல்வித் துறைக்கு முன்னதாக, சி.பி.எஸ்.இ., பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டன. அதனால், தமிழக பள்ளி கல்வித் துறைக்கு நெருக்கடி ஏற்பட்டது. அப்போதும், முடிவுகளை அறிவிக்க இயக்குநரகம் முன்வரவில்லை.இதன் காரணமாக, இன்ஜினியரிங் மாணவர் சேர்க்கையை அறிவிக்க தாமதம் ஏற்பட்டது. அதனால், பிளஸ் 2 தேர்வு முடிவை வெளியிட, உயர் கல்வித் துறையும் நெருக்கடி கொடுத்தது. ஆனாலும், தேர்வுத் துறை சரியாக திட்டமிடாததால், முடிவை அறிவிக்கவில்லை.

இதையடுத்து, பள்ளி கல்வித் துறைக்காக காத்திருக்காமல், இன்ஜினியரிங் மாணவர் சேர்க்கையை, தமிழக உயர் கல்வித் துறை அமைச்சர் அன்பழகன் அதிரடியாக அறிவித்தார். எனவே, வேறு வழியின்றி தேர்வுத் துறை அவசரமாக, தேர்வு முடிவுகளை தயாரித்து, நேற்று காலை திடீரென வெளியிட்டது. பல லட்சம் பேர் தேர்வு எழுதிய நிலையில், அதற்கான முன் அறிவிப்பு இல்லாமல், தேர்வு முடிவுகளை வெளியிட்டதால், பெரும் குளறுபடி ஏற்பட்டது. மாணவர்கள், எந்த இணையதளத்தில் மதிப்பெண்ணை பார்க்க வேண்டும் என்று திணறினர். மொபைல் போன்களிலும், பலருக்கு எஸ்.எம்.எஸ்., கிடைக்கவில்லை. இணையதளமும் ஜவ்வாக நீண்ட நேரம் இழுத்தது.

ராணுவ ரகசியம்

இதுகுறித்து, பெற்றோர் கூறியதாவது:பல லட்சம் மாணவர்களின் எதிர்காலத்தை நிர்ணயிக்கும், பிளஸ் 2 தேர்வு முடிவை வெளியிடு வதற்கு கூட, பள்ளி கல்வித் துறையால் திட்டமிட முடியவில்லை.தேர்வு முடிவுகள் வெளியிடுவதை, ராணுவ ரகசியம் போல வைத்திருந்து அறிவிப்பது, மாணவர்கள், பெற்றோர் மற்றும் ஆசிரியர்களை பரிதவிப்புக்கு ஆளாக்கியது. பள்ளிகளிலும், திட்டமிட்டு ஆசிரியர்களை வரவழைத்து, மாணவர்களுக்கான பணிகளை மேற்கொள்ள முடியவில்லை. இது போன்ற குளறுபடியான நிர்வாகத்தை மேற்கொள்ளும் அதிகாரிகளை மாற்றி, சிறந்த நிர்வாகத் திறன் உள்ளவர்களை கண்டறிந்து, அவர்களுக்கு உரிய பொறுப்பை வழங்க வேண்டும்.இவ்வாறு, அவர்கள் கூறினர்.

அமைச்சருக்கே அதிர்ச்சி :

இதற்கிடையில், தேர்வுத் துறை இயக்குநரகம் சார்பில், நேற்று பத்திரிகை செய்தி குறிப்புகள் அனுப்ப கூட திட்டமிடவில்லை. பள்ளி கல்வி செயலகமே நேரடியாக களத்தில் இறங்கி, செய்தி, மக்கள் தொடர்புத் துறையை பயன்படுத்தி, பத்திரிகை அறிவிப்புகளை வெளியிட்டது.ஒவ்வொரு பணிகளையும் முறைப்படி அறிவிக்கும் பள்ளி கல்வி அமைச்சருக்கே, தேர்வு முடிவுகள் வெளியாவது குறித்து, தேவையான நேரத்தில் முன் அறிவிப்பு வரவில்லை என, கூறப்படுகிறது.

அதேபோன்று, காலையில் அவசரமாக வெளியிட்ட அறிவிப்பில், பிளஸ் 1 தேர்வு முடிவும் வருவதாக கூறி விட்டு, அந்த முடிவை வெளியிடவில்லை. அதனால், மாணவர்கள் நேற்று மாலை வரை, கம்ப்யூட்டர் மற்றும் மொபைல் போன் முன் காத்திருந்து, களைப்புக்கு ஆளாகினர்.இந்த குளறுபடிகளால், தேர்வுத் துறை இயக்குநர் விரைவில் மாற்றப்படலாம் என, தகவல்கள் வெளியாகி உள்ளன.

1 comment:

  1. Unganaala oru result kooda correcta vida mudila papersla firstu correcta check panningala yarukume edhir paatha Mark varala naraya pearu fail aairukanga avinga life spoil aagumnu kooda ninaika maatingala

    ReplyDelete

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459