கொரோனா வைரஸ் பரவலின் போது முட்டை,சிக்கன்,மட்டன் சாப்பிடலாமா ? அசைவம் குறித்த அலர்ட் - ஆசிரியர் மலர்

Latest

10/06/2020

கொரோனா வைரஸ் பரவலின் போது முட்டை,சிக்கன்,மட்டன் சாப்பிடலாமா ? அசைவம் குறித்த அலர்ட்


கொரோனா வைரஸ் பரவலை மிஞ்சும் அளவிற்கு அதனைப் பற்றிய போலிச் செய்திகளும் பரவிக் கொண்டுதான் இருக்கின்றன. அதில் ஒன்றுதான் ‘சைவ உணவு உட்கொள்பவர்கள் யாரும் கொரோனா வைரஸால் பாதிக்கப்படவில்லை’ என்ற செய்தி. இதுபோன்ற எந்த ஒரு கருத்தையும் உலக சுகாதார நிறுவனம் வெளியிடவில்லை என்று உறுதி செய்யப்பட்ட பிறகு இந்தச் செய்தி வதந்தி என நிரூபிக்கப்பட்டது. இதுபோல் ‘கொரோனா பரவிக்கொண்டிருக்கும் நேரத்தில் அசைவ உணவு உண்பதைத் தவிர்க்க வேண்டும்’ போன்ற கருத்துகளும் வாட்ஸ்அப் ஃபார்வேர்டுகளில் வலம்வருவதைக் காண முடிகிறது.
‘கொரோனா பரவலைத் தடுக்க மருந்துகள் எதுவும் கண்டுபிடிக்கப்படாத நிலையில் நாம் உட்கொள்ளும் உணவுகளும் அவற்றின் மூலம் கிடைக்கும் நோய் எதிர்ப்புத் திறனுமே நம்மைத் தற்காத்துக்கொள்ள ஒரே வழி
. இந்த நோய் எதிர்ப்புச் சக்தி அசைவ உணவுகளில் இருந்து அதிகம் கிடைக்கின்ற நிலையில் அவற்றை உட்கொள்வதைத் தவிர்க்க வேண்டாம். அசைவ உணவு எடுத்துக்கொள்ளும்போது சில வழிமுறைகளைக் கடைப்பிடித்தாலே போதும்’ என்கிறார்கள் ஊட்டச்சத்து நிபுணர்கள்.

ஊட்டச்சத்து நிபுணர் அம்பிகா சேகர்

கொரோனா காலத்தில் அசைவ உணவு உண்பவர்கள் என்னென்ன விஷயங்களை எல்லாம் கவனத்தில் கொள்ள வேண்டும் என்பது குறித்து ஊட்டச்சத்து ஆலோசகரான அம்பிகா சேகரிடம் பேசினோம்.

அசைவ உணவு உண்பவர்கள் கவனத்தில் கொள்ள வேண்டிய விஷயங்கள்:


Chicken

* பொதுவாக, ஏதாவது நோய்க்கிருமி பரவிக்கொண்டிருக்கும் நேரத்தில் அசைவ உணவு எடுத்துக்கொள்வது ஆபத்தானது என்பார்கள். அசைவ உணவுகள் நம் உடலில் நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிப்பதில் முக்கியப் பங்கு வகிக்கின்றன. எனவே சிக்கன், முட்டை, மீன் உள்ளிட்ட அசைவ உணவுகளை இவ்வேளையில் எடுத்துக்கொள்வதில் தவறில்லை.
* அசைவ உணவுப் பொருள்களை வாங்கும்போதும், சமைக்கும்போது சில பாதுகாப்பு நடவடிக்கைகளைப் பின்பற்றினால் அசைவ உணவைத் தவிர்க்க வேண்டிய அவசியம் ஏற்படாது. * சமைக்கப்படாத சிக்கன், மட்டன், மீன் போன்றவற்றை வாங்கும்போது அவை கெட்டுப்போகாமல் புதியதாக இருக்கின்றனவா என்று பார்த்து வாங்க வேண்டும்.
* சுகாதாரமான முறையில் சுத்தம் செய்து விற்பனை செய்யப்படும் இடங்களில் மட்டுமே அசைவ உணவுகளை வாங்க வேண்டும். ஏற்கெனவே பதப்படுத்தி வைக்கப்பட்டிருக்கும் சிக்கன், மட்டனையோ, ‘ரெடி டு குக்’ அசைவ பொருள்களையோ வாங்க வேண்டாம்.

egg

* எப்போதாவது ஒருமுறைதானே வெளியில் செல்கிறோம் என்று அதிகப்படியான அசைவ உணவுப்பொருள்களை வாங்கி ஃப்ரிட்ஜில் ஸ்டோர் செய்து வைக்கக் கூடாது
. அதுபோல் சமைத்த உணவுகளையும் ஃப்ரிட்ஜில் வைத்து மறுநாள் சாப்பிடுவதைத் தவிர்க்கவும்.
* சிலர் காலையில் பச்சை முட்டை குடிக்கும் பழக்கத்தைக் கொண்டிருப்பார்கள். அதனை இந்நேரத்தில் தவிர்க்கவும். முட்டையை நன்றாக வேகவைத்தோ அல்லது பொரித்தோ எடுத்துக்கொள்ளலாம். முட்டையை அரைவேக்காட்டில் சாப்பிடக் கூடாது.
Also Read:
* சிக்கன், மட்டன், மீன் போன்றவற்றைக் கடையிலிருந்து வாங்கிவந்த பிறகு மஞ்சள், உப்பு கலந்த தூய்மையான நீரில் நன்றாகக் கழுவிச் சுத்தம் செய்ய வேண்டும்.
* இவற்றை எண்ணெய்யில் பொரித்து உண்பதைவிட நன்றாகத் தீயில் வாட்டியோ (Grill), குழம்பாகவோ சமைத்துச் சாப்பிடலாம்.
* மீன், இறால், நண்டு போன்ற கடல் உணவுப்பொருள்களும் நம் உடலில் நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிப்பதில் முக்கியமானவை. இவற்றையும் நன்றாகச் சமைத்து உணவில் சேர்த்துக்கொள்ளலாம்.

fish


* சிக்கன், மட்டனை மிளகு, மஞ்சள், இஞ்சி எல்லாம் சேர்த்து சூப்பாக வைத்துக் குடிக்கலாம்.
* சிலர் மட்டனில் ஈரல், குடல், மண்ணீரல் (சுவரொட்டி), ரத்தம் போன்றவற்றை விரும்பி வாங்கி வந்து சமைத்துச் சாப்பிடுவார்கள். இவை நம் உடலில் ரத்தச் சிவப்பணுக்களை அதிகரிப்பதில் முக்கிய இடம் வகிக்கின்றன என்பதில் சந்தேகமில்லை. ஆனால் இது நோய்க்கிருமி பரவிக்கொண்டிருக்கும் நேரம் என்பதால் நீங்கள் சாப்பிடும் முன்பு அவை நன்றாக வேகவைக்கபட்டுள்ளனவா என்பதை உறுதிசெய்து கொள்வது நல்லது.
Also Read:
* சிக்கன், மட்டன் எலும்புகளைச் சமைக்கும்போது எலும்பின் மையத்தில் உள்ள எலும்பு மஜ்ஜை (Bone marrow) பகுதி முழுவதுமாக வேகவைக்கப்பட்டிருக்க வேண்டும்.
* எந்த அசைவ உணவை எடுத்துக்கொண்டாலும் அது நன்றாக வேக வைக்கப்பட்டுள்ளதா என்றும், கெட்டுப்போகாமல் உள்ளதா என்றும் பார்த்துச் சாப்பிடுங்கள்.
* உங்களுக்குக் காய்ச்சல், வயிற்றுப்போக்கு, அஜீரணக் கோளாறுகள் இருக்கும் நேரத்தில் அசைவ உணவு உண்பதைத் தவிக்கலாம்.


Biriyani

* சிலருக்கு சில அசைவ உணவுகள் அலர்ஜியை ஏற்படுத்தலாம். உங்களின் உடல் எந்த அசைவ உணவுகளை ஏற்றுக்கொள்கிறதோ அவற்றை மட்டும் உணவில் சேர்த்துக்கொள்ளுங்கள்.
* அசைவ உணவுகளைக் கடைகளில் வாங்கி உண்பதைத் தவிர்க்கவும். வேறு வழியில்லை. கடையில்தான் வாங்க வேண்டும் என்னும் பட்சத்தில் உங்களுக்கு நம்பிக்கையான, சுகாதார முறைகளைப் பின்பற்றும் கடைகளில் வாங்கிச் சாப்பிடலாம்.
* காலை மற்றும் மதிய வேளைகள் அசைவ உணவு சாப்பிட ஏற்றவை. ஒருவேளை இரவு அசைவ உணவு சாப்பிட்டால் சாப்பிட்ட பின் 4 மணி நேரம் கழித்து உறங்கச் செல்லுங்கள். இப்படிச் செய்வதால் செரிமானக் கோளாறுகள் ஏற்படுவதைத் தவிர்க்கலாம்” என்றார் ஊட்டச்சத்து ஆலோசகர் அம்பிகா சேகர்.

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459