தனியார் பள்ளிகள் விடைத்தாள்களில் கரையான் அரிப்பு - மதிப்பெண் பதிவிட முடியாமல் தவிப்பு ! - ஆசிரியர் மலர்

Latest

 




19/06/2020

தனியார் பள்ளிகள் விடைத்தாள்களில் கரையான் அரிப்பு - மதிப்பெண் பதிவிட முடியாமல் தவிப்பு !


எதிர்பாரத விதமாக கொரோனா பாதிப்பு காலங்களில் பள்ளியில் இருந்த ஆவணங்களை சரியாக பராமரிக்க இயலாமல் கரையான் தின்று விட்டதால், 10ம் வகுப்பு, பிளஸ் 1 தேர்வு மதிப்பெண் வழங்குவதற்கு, பள்ளி மதிப்பெண் பதிவேட்டை மட்டும் பயன்படுத்துமாறு, பல்வேறு சங்கங்கள் கோரிக்கை விடுத்துள்ளன. கொரோனா பிரச்னையால் ரத்து செய்யப்பட்ட, 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 1 தேர்வுக்கான மதிப்பெண்களை பதிவு செய்வதற்கு, காலாண்டு, அரையாண்டு விடைத்தாள்களை சேகரிக்க வேண்டும் என, அரசு தேர்வுத்துறை உத்தரவிட்டு உள்ளது. இதற்கு, பல்வேறு தரப்பில் எதிர்ப்பு எழுந்துள்ளது. பல பள்ளிகளில் விடைத்தாள்கள், மாணவர்கள் வசம் வழங்கப்பட்டுள்ளன. அவற்றை மாணவர்கள், பள்ளிகளில் திரும்ப ஒப்படைக்கவில்லை. பல அரசு பள்ளிகளில், விடைத்தாள்களே இல்லை. இதனால், மதிப்பெண் பதிவு செய்யும் பணியில், சிக்கல் ஏற்பட்டுள்ளது. இது குறித்து, தமிழ்நாடு நர்சரி, பிரைமரி, மெட்ரிக் மேல்நிலை மற்றும் சி.பி.எஸ்.இ., பள்ளிகள் சங்க மாநில பொதுச் செயலர் நந்தகுமார் சார்பில், அரசு தேர்வு துறைக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.
அதில் கூறியிருப்பதாவது:தனியார் பள்ளிகளின் மாணவர்கள், பொதுத் தேர்வுகளில், அதிக மதிப்பெண் பெற, பல்வேறு பயிற்சி நடவடிக்கைகள் மேற்கொண்டுள்ளோம். ஒவ்வொரு முறை தேர்வு நடக்கும் போதும், அவர்களின் மதிப்பெண்கள் மற்றும் மாணவர்களின் திறன்களை தெரிந்து கொள்ள, விடைத்தாள்களை பெற்றோரிடமே கொடுத்து விடுவது வழக்கம்.இந்நிலையில், தற்போது பொதுத் தேர்வு மதிப்பெண்ணுக்காக, திடீரென விடைத்தாளை கேட்டால், மாணவர்களிடம் பெற முடியாத சூழல் உள்ளது. பல இடங்களில், மாணவர்களிடம் விடைத்தாள்களும் இல்லை. கட்டாயம் விடைத்தாள் வேண்டுமென்றால், பல பள்ளிகளில், மாணவர்களுக்கு வினாத்தாளை, 'வாட்ஸ் ஆப்' வாயிலாக அனுப்பி, வீட்டில் இருந்து தேர்வு எழுத வைத்து, அதை, கல்வித் துறையிடம் ஒப்படைக்கும் தவறான சம்பவங்கள் நடக்க வாய்ப்புள்ளன.எனவே, பள்ளிகளில் உள்ள தேர்வு மதிப்பெண் பதிவேட்டை வைத்து, மதிப்பெண்ணை கணக்கிட வேண்டும்.இவ்வாறு கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.தமிழ்நாடு பதவி உயர்வு பெற்ற முதுநிலை பட்டதாரி ஆசிரியர் சங்க தலைவர் செல்வராஜ் அனுப்பிஉள்ள கடிதம்:அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில், மாணவர்களின் தேர்ச்சி சதவீதத்தை உயர்த்துவதற்காக, பல்வேறு தேர்வு நடத்தி, தரம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது
. மாணவர்களின் காலாண்டு, அரையாண்டு விடைத்தாள்களை பாதுகாக்க, பெரும்பாலான பள்ளிகளில் போதிய வசதி இல்லை. கட்டுக்கட்டாக வைக்கப்பட்டிருந்த விடைத்தாள்கள், கரையான்கள், எலிகள் மற்றும் மழை நீரால் சேதமாகி விட்டன.சில பள்ளிகளில், திருடர்களின் அட்டகாசத்தால், விடைத்தாள்கள் துாக்கி வீசப்பட்டு சிதைக்கப்பட்டு உள்ளன. இந்த சூழலில், அரைகுறையான விடைத்தாள்களால், மதிப்பெண் பதிவு செய்ய முடியாது. எனவே, பள்ளிகளில் உள்ள மதிப்பெண் பதிவேட்டை பயன்படுத்தி, மதிப்பெண்களை குறிப்பிட வேண்டும்.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459