பிறந்த நாள், கிரக பிரவேசம் முக்கியமல்ல: தமிழக ராணுவ வீரர் பழனியின் கடமையுணர்வு - ஆசிரியர் மலர்

Latest

17/06/2020

பிறந்த நாள், கிரக பிரவேசம் முக்கியமல்ல: தமிழக ராணுவ வீரர் பழனியின் கடமையுணர்வு


ராமநாதபுரம்: சீன வீரர்களின் தாக்குதலில் வீரமரணம் அடைந்த ராமநாதபுரம் ராணுவ வீரர் கே.பழனி(40), தனது பிறந்த நாள், கிரகபிரவேசம் ஆகியவற்றிற்கு விடுமுறை எடுக்காமல் கடமையே முக்கியம் என நாட்டை காக்கும் பணியில் ஈடுபட்டது அனைவரையும் பெருமையடைய வைத்துள்ளது.
இந்தியாவின் லடாக்கின் கல்வான் பகுதியில் ஐந்து வாரங்களாக இந்திய – சீன படைகள் முகாமிட்டிருந்த நிலையில், நேற்று முன்தினம்( ஜூன் 15) மாலையில், திடீரென மோதல் ஏற்பட்டது. சீன ராணுவம் நடத்திய அட்டூழிய தாக்குதலில், நம் வீரர்கள், 20 பேர் வீரமரணம் அடைந்தனர். எல்லையில் உள்ள நிலையை மாற்றியமைக்க முயன்ற நம் ராணுவத்திற்கு பதிலடி கொடுத்தனர். இதில் 43 சீன வீரர்கள் உயிரிழந்தனர்.
இதனால், இரு நாடுகள் இடையே பதற்றம் ஏற்பட்டுள்ளது. சீனா அட்டூழியத்தால், வீரமரணம் அடைந்தவர்களில் ராமநாதபுரத்தை சேர்ந்த பழனியும் ஒருவர். இவர் ராணுவத்தில் ஹாவில்தாராக பணிபுரிந்து வந்தார்.
ராமநாதபுரம் மாவட்டம், கடுகலூர் கிராமத்தில் காளிமுத்து மற்றும் லோகம்மாள் தம்பதிக்கு மூத்த மகனாக பிறந்தவர் பழனி. இவருக்கு இரு சகோதரர்கள் உள்ளனர்.  , பழனியால் 10ம் வகுப்புக்கு மேல் படிக்க முடியவில்லை. இதனால் 18 வயதிலேயே ராணுவத்தில் சேர்ந்தார். அதன் பின்னர் தான் தொலைதூர கல்வி மூலம் பிளஸ் 2 மற்றும் பிஏ பட்டம் பெற்றார். மனைவி வனிதாதேவி(33)யும் தனியார் கல்லூரியில் உதவியாளராக பணிபுரிகிறார்.
கடந்த 6 மாதங்களுக்கு முன்னர், சொந்த கிராமத்தில் வாங்கிய நிலத்தில் வீடு கட்டும் பணியை துவக்கி வைக்க 15 நாள் விடுமுறையில் வந்துள்ளார். அப்போது, இளைஞர்களை ராணுவத்தில் சேர அறிவுரை வழங்கினார். விடுமுறையில் சொந்த ஊருக்கு வந்தாலும், வீட்டுக்கடன் வாங்கும் பணியில் எப்போதும் பிசியாக இருந்துள்ளார். வீடு கட்டுவதற்காக ஆரம்ப கட்ட பணிகளுக்காக மனைவியின் நகைகளை விற்றுள்ளார். இன்னும் ஒரிரு ஆண்டுகளில் ராணுவத்தில் இருந்து ஓய்வு பெற்று அதில் கிடைக்கும் பணம் மூலம் கடனை அடைத்து விட திட்டமிட்டிருந்தார். ராணுவத்தில் பணியாற்றிய காலத்திலும் கடமையை உயிர்மூச்சாக கொண்டு பணியாற்றி வந்துள்ளார்.
அவரது பிறந்த நாள் கடந்த 3ம் தேதி வந்துள்ளது. அன்றைய தினமே, புதிய வீட்டிற்கு கிரக பிரவேச நிகழ்ச்சி நடந்துள்ளது. இதற்கு வரும்படி கடந்த1ம் தேதி, தொலைபேசி மூலம் வனிதா அழைத்தார். ஆனால், தற்போது சூழ்நிலை சரியில்லை. விடுப்பு கிடைக்காது. ஊருக்கு வர முடியாது என தெரிவித்த பழனி, தான் தொடர்பு கொல்ல முடியாத பகுதிக்கு செல்கிறேன். அதனால், நீங்கள் கவலைப்பட வேண்டாம் என தெரிவித்துள்ளார். சுமார் 4 நிமிடங்கள் மட்டுமே நிகழ்ந்த இந்த உரையாடல் தான், வனிதாதேவி பழனியுடன் கடைசியாக பேசியது.
இது தொடர்பாக பழனியின் மாமனார் நாச்சியப்பன் கூறுகையில், 3ம் தேதி பால் காய்ச்சுதல் நிகழ்ச்சி நடக்கும் போது, ஹோமம் நடைபெற்றது. அப்போது, கூறப்பட்ட மந்திரங்களை தொலைபேசி மூலம் பழனி கேட்டார்.இதனை தெரிந்த எனது மகள் கவலைப்பட்டார். எல்லையில் அமைதி திரும்பும் என நான் தான் ஆறுதல் கூறினேன் என தெரிவித்தார்.
பழனியின் சகோதரர் இதயக்கனி(25)யும் ராணுவத்தில் தான் பணியாற்றி வருகிறார். தற்போது, ராஜஸ்தானில் உள்ள அவர் தான் நேற்று காலை 9 மணியளவில் குடும்பத்தினரை தொடர்பு கொண்டு, பழனி உயிரிழந்த தகவலை முதலில் தெரிவித்துள்ளார்
.இதனையறிந்த வனிதா தேவி மயக்கமடைந்தார். மகன் பிரசன்னா(10), திவ்யா(8) குடும்பத்தில் அதிர்ச்சியில் உறைந்தனர். குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் குடும்பத்திற்கு ஆறுதல் கூறினர். பழனியின் இழப்பு சோகத்தை ஏற்படுத்தினாலும், அவரது வீரமரணம் பெருமை அளிப்பதாக உறவினர்கள் தெரிவித்தனர்.
பழனியில் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ள முதல்வர் இ.பி.எஸ்., அவரது குடும்பத்திற்கு ரூ.20 லட்சம் நிவாரணமும், ஒருவருக்கு அரசு வேலையும் வழங்கப்படும் என தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459