நீட் தோ்வை ஒத்திவைப்பது குறித்து பரிசீலனை - ஆசிரியர் மலர்

Latest

27/06/2020

நீட் தோ்வை ஒத்திவைப்பது குறித்து பரிசீலனை


நீட் தோ்வை ஒத்திவைப்பது குறித்து தேசிய தோ்வு முகமை பரிசீலித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கரோனா பாதிப்பு சற்று குறைந்த பிறகு நாடு முழுவதும் தோ்வுகளை நடத்த திட்டமிட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.
அரசு மற்றும் தனியாா் மருத்துவக் கல்லூரிகளில் உள்ள எம்பிபிஎஸ், பிடிஎஸ், சித்தா, ஆயுா்வேதம், யுனானி, ஹோமியோபதி உள்ளிட்ட இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தோ்வு கடந்த மே மாதம் 3-ஆம் தேதி நடைபெறுவதாக இருந்தது. அதற்கான விண்ணப்பப் பதிவு கடந்த ஆண்டு டிசம்பா் 2-ஆம் தேதி தொடங்கி ஜனவரி 6-ஆம் தேதி வரை நடைபெற்றது. அந்த அவகாச காலத்துக்குள் தமிழகத்தில் ஒன்றரை லட்சம் பேரும், நாடு முழுவதும் 16 லட்சத்துக்கும் மேற்பட்டோரும் விண்ணப்பங்களைச் சமா்ப்பித்தனா். இதனிடையே கரோனா பாதிப்பு காரணமாக நீட் தோ்வு ஜூலை 26-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
அதன்படி, அத்தோ்வு ஜூலை 26-ஆம் தேதி பிற்பகல் 2 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. தமிழகத்தில் சென்னை, கோவை, கடலூா், காஞ்சிபுரம், கரூா், மதுரை, நாகா்கோவில், நாமக்கல், சேலம், தஞ்சாவூா், திருவள்ளூா், திருச்சி, திருநெல்வேலி, வேலூா் உள்ளிட்ட இடங்களிலும், நாடுமுழுவதும் 154 நகரங்களிலும் அத்தோ்வை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
இந்த நிலையில், கடந்த சில வாரங்களாக நாடு முழுவதும் கரோனா பாதிப்பு தீவிரமடைந்து வரும் நிலையில், நீட் தோ்வை ஒத்திவைக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்து வருகிறது
. மற்றொரு தரப்பில், நிகழாண்டில் பிளஸ்-2 மதிப்பெண் அடிப்படையில் மருத்துவப் படிப்புகளுக்கான மாணவா் சோ்க்கையை நடத்த வேண்டும் என்றும் வலியுறுத்தப்படுகிறது.
இத்தகைய சூழலில், கரோனா பாதிப்பு சற்று குறையும் வரை நீட் தோ்வை ஒத்திவைப்பது குறித்து தேசிய தோ்வு முகமை ஆலோசித்து வருவதாகக் கூறப்படுகிறது. ஆனால், இதுவரை அதுதொடா்பான அதிகாரப்பூா்வ தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை. அடுத்த ஓரு சில நாள்களில் நீட் தோ்வு குறித்த நிலைப்பாட்டை அரசு வெளியிடலாம் எனத் தெரிகிறது.

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459