தேர்வை விட மாணவர்களின் உயிர் முக்கியம் :அலசும் கல்வியாளர்கள் கருத்து - ஆசிரியர் மலர்

Latest

14/05/2020

தேர்வை விட மாணவர்களின் உயிர் முக்கியம் :அலசும் கல்வியாளர்கள் கருத்து


மாணவர்களின் தேர்வா… உயிரா..!

தமிழகத்தில் 9,000-க்கும் மேற்பட்ட நபர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். நோய்த் தொற்றின் பரவல் வேகமாக அதிகரித்துக்கொண்டிருக்கும் இந்நிலையில், எப்போது ஊர் இயல்புநிலைக்குத் திரும்பும் என்னும் கேள்வியே எல்லோரிடமும் எஞ்சி நிற்கிறது. கொரோனா நெருக்கடியில் மாநிலம் சிக்கித்தவிக்கும் இந்நிலையில், ஜூன் 1-ம் தேதி முதல் 12-ம் தேதி வரை பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுகள் நடைபெறும் எனத் தமிழ்நாட்டுக் கல்வி அமைச்சர் செங்கோட்டையன் அறிவித்துள்ளார்.
இதன் சாதக பாதகங்கள் குறித்து கல்வியாளர்களிடம் பேசினோம்.

பேராசிரியர் வசந்திதேவி:

குழந்தைகளுடைய உயிரைப் பற்றியோ, ஆசிரியர்களின் உடல்நலனைப் பற்றியோ எந்த அக்கறையும் இல்லாத ஓர் அறிவிப்பு இது. இத்தனை நாள்கள் பொதுத்தேர்வுகள் ஜூலையில் நடக்கும் என்றும் பள்ளிக்கூடங்கள் திறக்கப்பட்டபின் நடக்குமென்றும் பேசப்பட்டு வந்தன. இந்நிலையில், அமைச்சரின் அறிவிப்பு பெற்றோர்களுக்கும் குழந்தைகளுக்கும் மிகப்பெரிய அதிர்ச்சியைத் தந்துள்ளது.
இன்னும் 17 நாள்களே கையில் இருக்கும் நிலையில் குழந்தைகளை உளவியல் ரீதியாகப் பொதுத் தேர்வுக்குத் தயார் செய்வதற்கு ஆசிரியர்களின் பங்கு அவசியம். அதுமட்டுமன்றி, மே 31 வரை போக்குவரத்து சேவைகள் மிகுந்த கட்டுப்பாடுகளுடன் இருக்கும் எனக் கூறபட்டுள்ள நிலையில் சொந்த ஊர்களுக்கு சென்ற ஆசிரியர்களும் மாணவர்களும் தங்கள் இடங்களுக்கு திரும்புவதில் நடைமுறை சிக்கல்கள் உள்ளன, சரியான நேரத்தில் தேர்வு மையங்களை அடைவதிலும் சிரமங்கள் உள்ளன.

பேராசிரியர் வசந்திதேவி

இந்த நேரத்தில் கூட்டம் கூட்டமாகத்தான் பயணிக்க நேரிடும். கோயம்பேட்டில் நெரிசல் காரணமாகப் பரவிய தொற்றால் இன்று தமிழகமே அவதிக்குள்ளாகியுள்ளது. அதே தவற்றை மீண்டும் நிகழ்த்த இருக்கிறது தமிழக அரசு. தேர்வு எதிர்கொள்ளவிருக்கும் மாணவர்களுக்குச் சமூக இடைவெளி குறித்தான புரிதலை ஏற்படுத்தினாலும் சில மாணவர்கள் அசாத்தியமான துணிச்சலுடன் தன்னை கொரோனா ஒன்றும் செய்யாது என்னும் போக்குடன் விதிமுறைகளை மீறவே செய்வார்கள். சிலர், அதற்கு நேரெதிராகத் தனக்குத் தொற்று ஏற்பட்டுவிடுமோ என மிகுந்த அச்சத்துடன் தேர்வுக்கு மனஉளைச்சலுடனே தயாராவார்கள்.
தொற்றுநோய் காலத்தில் எந்த முன்னறிவிப்பும் தயார்ப்படுத்துதலும் இல்லாமல் பொதுத்தேர்வு அறிவிப்பது சரியல்ல. இந்த ஒருமுறை, ஒன் டைம் ரிலாக்ஸேஷன் கொடுத்து தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்பதே நல்ல தீர்வும் எதிர்பார்ப்புமாக உள்ளது. ஏற்கெனவே, பரீட்சை பயத்தில் மாணவர்கள் உளவியல் ரீதியாகப் பாதிக்கப்பட்டிருக்கும் நிலையில், அவர்களை மேலும் கொடுமையில் தள்ளினால் விபரீதங்களை அரசு சந்திக்க நேரும்.

கல்வியாளர் ஜெ.கிருஷ்ணமூர்த்தி

ஆன்லைன் வகுப்புகளின் மூலம் ஏற்கெனவே ஆசிரியர்கள் பாடம் எடுத்துக்கொண்டுதான் இருக்கிறார்கள். அதன்மூலமே அவர்களை வழிநடத்துவது சுலபம்தானே எனலாம். ஆனால், 20% பெற்றோர்களாலேதா அந்த வசதியை, தங்கள் குழந்தைகளுக்கு ஏற்படுத்திக்கொடுக்க முடிவதாகப் புள்ளி விவரங்கள் கூறுகின்றன.
அதுமட்டுமல்லாமல், பாடங்கள் டிசம்பருக்கு முன்னதாகவே முடிக்கப்பட்டுவிட்டன. ரிவிஷன் போய்க்கொண்டு இருந்தபோதுதான் கொரோனா தொற்றால் பள்ளிகளுக்கு விடுமுறையும் அளிக்கப்பட்டது. பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு என்பது மாணவர்களின் வாழ்க்கையில் சந்திக்கும் முதல் பொதுத் தேர்வு. இது குறித்த பயமும் பீதியும் இயல்பாகவே இருக்கும். இந்த இக்கட்டான சூழலில் மாணாவர்களைத் தயார் செய்வது இன்னும் சவாலான காரியம்.
டிசம்பருக்கு முன்னதாகவே பள்ளிகளில் பாடங்கள் நடத்தி முடிக்கப்பட்டுவிட்டன. அது வரையிலும் 50% – 60% தேர்ச்சிபெறும் குழந்தைகளின் மதிப்பெண்கள் டிசம்பருக்கு பிறகே 90%க்கு மேல் அதிகரிக்கிறது.
மிகுந்த அக்கறைகாட்டி கிட்டத்தட்ட கூடுதலாக 40% மாணவர்களை ஆசிரியர்கள் தேர்ச்சிப்பெறச் செய்வதும் இந்தக் காலகட்டத்தில்தான். இந்தப் பகுதியே இல்லாமல் நேரடியாக ஜூனில் பரீட்சைக்குச் செல்வது உளவியல் ரீதியான சிக்கல்கலையே உருவாக்கும்.
மேல்நிலைப் படிப்புக்கு, மாணவர்களுக்குத் தகுந்த பிரிவுகளைத் தேர்வுசெய்ய இந்த மதிப்பெண்கள் முக்கிமானதாக இருக்கிறதுதான். ஆனால், அதற்கான பொதுத்தேர்வை இவ்வளவு ரிஸ்க் எடுத்து நடத்தாமல், இயல்பு நிலை திரும்பியபின் நடத்தி, பிரிவுகள் பிரிப்பது சிறந்தது.

கல்வியாளர் கிருஷ்ணமூர்த்தி

தொற்று ஏற்படும் பேரிடர் சூழலில் தேர்வுகள் நடத்திதான் ஆக வேண்டும் என்பது கட்டாயம் இல்லை. இதற்கு முன்னர் ஏற்பட்ட அசாதாரண சூழல்களில் தமிழக அரசு மறுதேர்வை ரத்து செய்த முன் உதாரணங்கள் கல்வித்துறையில் உள்ளன. 2008-ம் ஆண்டு வேலூரில் விடைத்தாள் திருத்தும் மையத்தில் தீ விபத்து ஏற்பட்டு 12,000 விடைத்தாள்கள் எரிந்து போயின. அப்போது, மாணவர்களின் மனநலனைக் கருத்தில்கொண்டு அதற்கு முன் எடுத்திருந்த சராசரி மதிப்பெண்கள் அடிப்படையில் எது அதிகமோ அதையே வழங்கிவிடலாம் என்ற ஆலோசனையை ஏற்று மதிப்பெண் வெளியிட்டது. அதைப்போலவே 2013-ல், விழுப்புரத்தில் விடைத்தாள்கள் காணாமல்போனபோது மாணவர்களின் மனநிலையைக் கருத்தில்கொண்டு அரசு முடிவெடுத்தது. பத்தாம் வகுப்பு தேர்வைத் தள்ளிபோடுவதாலோ ரத்து செய்வதாலோ நிச்சயம் யாருக்கும் எந்த இழப்பும் ஏற்படப்போவதில்லை. ஏற்கெனவே அசாதாரண சூழல்களை அரசு சரியாகக் கையாண்டிருக்கும்போது இன்னொரு முறை அதைச் செய்வதில் கஷ்டம் எதுவும் இருக்கப்போவதில்லை.
மேற்படிப்பைத் தொடர மதிப்பெண் சான்றிதழ் அவசியமாக இருக்கிறது. பரீட்சை இல்லாவிட்டால் மதிப்பெண் சான்றிதழுக்கு என்ன செய்வது என்ற கேள்விக்கும் பதில் இருக்கிறது. அரசுப் பள்ளிகளிலும் அரசு உதவிபெறும் பள்ளிகளிலும் எமிஸ் (EMIS) என்னும் எண்கள் தனித்தனியே ஒவ்வொரு மாணவ-மாணவிக்கும் கொடுக்கப்பட்டுள்ளது. அதில் மாணவர்களின் மதிப்பெண்களும் பதிவு செய்யப்பட்டே வரப்பட்டுள்ளன. இதுவரைக்கும் நடந்த ரிவிஷன் தேர்வுகள் வரை மாணவர்ளின் மதிப்பெண்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அரசு நினைத்தால் தாரளாமாக 2020 கொரோனா தொற்று ஏற்பட்ட காலம் என்பதை சான்றிதழில் குறிப்பிட்டு பழைய மதிபெண்களின் அடிப்படையில் கிரேடுகளைக் கொடுக்க முடியும். அதன் அடிப்படையில் மதிபெண்கள் அளித்து இக்கட்டான இந்தச் சூழலில் அனைத்துக் குழந்தைகளையும் தேர்ச்சி பெற வைக்க முடியும்.
Also Read:
மதிய வேளையில் கொடுக்கப்படும் சத்துணவை நம்பியே பெரும்பான்மையான அடித்தட்டு குடும்பத்து குழந்தைகள் பள்ளிக்கு அனுப்பப்படுகிறார்கள். இப்போது அவர்களுக்கு அதுவும் இல்லாமல் போய்விட்டது. சரிவிகித ஊட்டச்சத்து உணவும் இல்லாமல் ஆசிரியர்களின் வழிகாட்டுதலும் அக்கறையும் இல்லாமல் தேர்வுக்குச் செல்ல நேரிடுவது நல்லது அல்ல.
வெறும் வயிற்றுடன் நேரடியாகத் தேர்வை மட்டும் எழுதிவிட்டு செல்லுங்கள் என்பதாகவே உள்ளது இந்தத் தேர்வு அறிவிப்பு. நடுத்தர வர்க்கம் மற்றும் அதற்கு மேலிருக்கும் வர்க்கத்தைப் பொதுப்படையாகக் கருத்தில்கொண்டு அடித்தட்டு மக்களைக் கண்டுகொள்ளாத நிலையிலேயே நடவடிக்கைகள் எடுக்கப்படுவதாகத் தெரிகிறது.
பொதுத்தேர்வு நடக்கவில்லை என்றால் கடந்த ஆண்டின் தேர்ச்சி சதவிகிதத்தைவிட 3% அதிகமாகத் தேர்ச்சி பெறுவார்கள் மாணவர்கள். இக்கட்டான சூழ்நிலையில் உளவியல் ரீதியாகப் பாதிக்கப்படுவதைவிட அவர்கள் மதிப்பெண்கள் எடுத்துவிட்டு போகட்டுமே!

பிரின்ஸ் கஜேந்திரபாபு. கல்வியாளர்

கல்வியாளார் பிரின்ஸ் கஜேந்திரபாபு

இது விடுமுறைக் காலம் அல்ல, பேரிடர் காலம். ஒவ்வொரு நூற்றாண்டுக்கு ஒருமுறை இதுபோன்ற நோய்த் தொற்றால் மக்கள் பாதிக்கப்படுகின்றனர். இந்த 21-ம் நூற்றாண்டில் நம்மை அச்சுறுத்திக்கொண்டிருப்பது கொரோனா. கொரோனாவில் இருந்து தப்பித்துக் கொள்வதற்கு உடலில் எதிர்ப்பு சக்தி அதிகம் இருக்க வேண்டும். எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க காய்கறி, பழங்களை உட்கொள்ள வேண்டும். அரசு வெறும் அரிசியை மட்டும் கொடுத்துள்ளது. மேலும், 1,000 ரூபாய் கொடுத்திருந்தாலும் அப்பணத்தைக் கொண்டு எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் விதமான உணவுகளை ஏழை மக்களால் வாங்கி சாப்பிட இயலாது. இந்நிலையில் கிராமப்புற மாணவர்கள், மலைவாழ் மக்களின் மத்தியில் உள்ள மாணவர்கள், பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவர்கள் என இவர்களின் சுகாதாரம் மிகவும் பின்தங்கியே இருக்கும். பசிப்பிணியிலும் தனிமையிலும் இருந்த மாணவர்களுக்கு நிச்சயம் நிம்மதியான மன நிலைமை இருக்க வாய்ப்பில்லை. தொற்றுப் பரிசோதனை இதுவரை தமிழக மக்கள் அனைவருக்கும் எடுத்து முடிக்காத நிலையில் பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு ஜூன் 1-ம் தேதி தேர்வு நடத்துவது என்பது அரசின் அலட்சியத்தை வெளிப்படுத்துகிறது. 15 நாள்கள் வழக்கமான வகுப்புகளை மாணவர்களுக்கு நடத்தி பின்பு தேர்வை நடத்தினால், தேர்வை எதிர் கொள்வதற்கு மனதளவில் தயாராவார்கள். தமிழக முதல்வர் பிரதமரிடம் மே 31 வரை ரயில் போக்குவரத்தை நிறுத்த வேண்டும் எனக் கோரிக்கை விடுத்து நடைமுறைக்கு வந்த நிலையில் மாணவர்களுக்கு ஜூன் 1-ம் தேதி தேர்வு நடத்துவது என்பது எதிர்க்கத்தக்க ஒன்று
. பொதுத் தேர்வு குறித்து பல்வேறு தரப்பில் இருந்து மனு அளித்துள்ள நிலையில் அரசு எந்த மனுவையும் விசாரிக்கவில்லை. இரு தினங்களுக்கு முன்பு ஒரு தனியார் பள்ளி நிர்வாகம், மனு ஒன்றைத் தாக்கல் செய்தது. அம்மனுவில்,
“கடந்த ஆண்டு நிலுவைத் தொகையை வசூலிக்க வேண்டும். மேலும் தேர்வுக்காக மையங்களைத் தயார் செய்ய வேண்டும். எனவே, தனியார் பள்ளி அலுவலகங்களைத் திறக்க அரசு அனுமதிக்க வேண்டும்.” எனத் தெரிவித்திருந்தது.
இதற்கடுத்தே அரசு பொதுத்தேர்வின் தேதியை வெளியிட்டுள்ளதால், அரசுப் பள்ளி மாணவர்களின் நலனைக் காட்டிலும் தனியார் பள்ளிகளின் பொருளாதாரத்தில் அரசு அக்கறை காட்டுகிறது என்பதை உணர முடிகிறது. ஜூன் 1-ம் தேதி நடக்கவிருக்கும் பொதுத் தேர்வு தனியார் பள்ளியின் வருமானத்தை அதிகரிப்பதற்காக நடத்தப்படும் தேர்வு. கல்வி இயல் தொடர்புடைய தேர்வு இல்லை. மாணவர்களின் உளவியலைப் பார்த்து நடத்தும் தேர்வு அல்ல. நேரடியாக மாணவர்களைத் தேர்வு எழுத வைப்பது என்பது மாணவர்கள் மீது நடத்தப்படும் மிகப் பெரிய வன்முறை.

கல்வியாளர் ஆயிஷா நடராசன்

இந்தியாவிலே குழந்தைகள் கொரானாவால் அதிகமாகப் பாதிக்கப்பட்டு இருப்பது
தமிழ்நாட்டில்தான் என்று ஒரு புள்ளி விவரம் நம்மைக் கலங்க வைக்கிறது. சத்துணவுக் கூடங்களுடன் கூடிய பள்ளிகளையும் நாம் மூடியதால்… லட்சக்கணக்கான குழந்தைகள் ஊரடங்கு காரணமாகப் பெற்றோர்க்கு வருமானம் இல்லாத அவலச்சூழலால் பட்டினி கிடக்கின்றன. அதற்கான தீர்வு பற்றி அரசுக்கு யோசிக்க நேரம் இல்லை. பல மாணவர்கள் குடும்ப சூழ்நிலை… ஊரடங்கு காரணமாக இடம் பெயர்ந்தும்… தங்கள் பள்ளி இருக்கும் ஊரில் இருந்து சொந்த ஊர் சென்றும் இருக்கிறார்கள். போதுமான போக்குவரத்து இன்றி, இயல்புநிலை திரும்பாமல் குழந்தைகளைப் பயணிக்க வைப்பது பாதுகாப்பானது அல்ல.

ஆயிஷா இரா.நடராசன், கல்வியாளர்

உலகமே நோய்த் தொற்றில் இருந்து தன் பிரஜைகளை மீட்கப் போராடி வரும் சூழ்நிலையில் பள்ளித்திறப்பு,
அதற்கான ஆயத்தங்களுக்காகச் சீனா பிரத்யேக குழுக்கள் அமைத்து அறிக்கைகளை விவாதித்து 6 வாரம் அவகாசம் கொடுத்து, சில பள்ளிகளைத் திறந்து ஒத்திகை மட்டுமே பார்த்துவரும் சூழலில் நாம் நேரடியாகத் தேர்வுகள் என அறிவிப்பது நோய்த்தடுப்பு அறிவியலுக்கு புறம்பான செயல்.
கல்லூரி பல்கலைக்கழக மாணவர்களுக்கே ஆகஸ்ட் 1-தான் வகுப்பு என அறிவிக்கப்பட்டுள்ளபோது பள்ளிக் குழந்தைகளுக்கு ஜூன் 1-ம் தேதி தேர்வுகள் என்பது குழந்தைகள் உளவியல்படி மிகத்தவறான முடிவு. பள்ளி திறப்பு நடவடிக்கைகளைப் பரிந்துரை செய்ய வல்லுநர் குழு அமைக்க வேண்டும். அதன் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டு விவாதித்து முடிவெடுக்க வேண்டும்… அதுதான் சரி… அதுவரை தேர்வுகள் நடத்தக்கூடாது.
தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459