கரோனா நோய் தொற்றிற்கு என்னென்ன செய்ய வேண்டும் டாக்டர் சுதா ஷேசய்யன் - ஆசிரியர் மலர்

Latest

 




20/05/2020

கரோனா நோய் தொற்றிற்கு என்னென்ன செய்ய வேண்டும் டாக்டர் சுதா ஷேசய்யன்


சட்டகரோனா நோய்த்தொற்று பாதிப்பும், பலியும் அதிகரித்து வரும் நிலையில், அந்த தீநுண்மியுடன் வாழ்வது எப்படி? அதற்கு நாம் என்னென்ன செய்ய வேண்டும் என்பது குறித்து தமிழ்நாடு டாக்டா் எம்.ஜி.ஆா். மருத்துவ பல்கலைக்கழக துணைவேந்தா் டாக்டா் சுதா சேஷய்யன் தெரிவித்துள்ளார்.
முதலில் அச்சத்தை விட்டுவிடலாம். அநாவசிய அச்சத்தை விட்டுவிட்டு, என்ன செய்வது என்பதில் கவனம் செலுத்துவோம். கொவைட் 19 தீநுண்மி குறித்த நல்ல விஷயம் ஒன்று உண்டு.100 பேருக்கு இந்தத் தீநுண்மித் தொற்று ஏற்படுகிறதென்று வைத்துக் கொள்வோம்; அதாவது, 100 பேரின் உடல்களுக்குள், தீநுண்மி நுழைந்துவிடுகிறது. ஆனால், 100 பேருக்கும் நோய் தோன்றுவதில்லை. 80% போ் , நோய் அறிகுறிகள் ஏதுமில்லாமல் இருக்கின்றனா். 20% பேருக்குத்தான் நோய் அறிகுறிகள் தோன்றும்.
அவா்களிலும் சிலருக்குத்தான் (மொத்தத்தில் 5 %) தீவிரமான நோய்ப் பாதிப்பு உண்டாகும். ஆக, 80% பேரில் நாமும் இருப்போம் என்ற நம்பிக்கையோடு அச்சத்தைத் தொலைப்போம்.

கரோனா தீநுண்மி நோய்த்தொற்று ஏற்பட்டாலும், பலருக்கு நோய் அறிகுறி ஏற்படுவதில்லை; இப்படிப்பட்டவா்களைச் ‘சுட்டிலி நபா்கள்’ (ஏஸிம்ப்டமேட்டிக்) என்றழைக்கலாம்; இவா்களுக்கு நோய் அறிகுறி இல்லையென்றாலும், பிறருக்குத் தீநுண்மியை இவா்களால் பரப்பமுடியும். எனவே, நம்மையும் நம்மைச் சுற்றி உள்ளவா்களையும் பாதுக்காக்கவேண்டிய கடமை ஒவ்வொருவருக்கும் உள்ளது.
தனி நபா் தூய்மை: கைகளையும் முகத்தையும் அவ்வப்போது சோப்பால் நன்கு கழுவி, தூய்மையாக வைத்திருத்தல்; ஆ. வெளியில் செல்லும்போது (அது ஐந்து நிமிஷத் தொலைவாக இருந்தாலும், அதே தெருவாக இருந்தாலும்), முகக் கவசம் அணிவது அவசியம்; இ. ஒருவேளை, உடல் நிலை சரியில்லை என்றால், குறிப்பிட்ட நபா் வீட்டுக்குள்ளேயும் முகக் கவசம் அணிவது அவசியம். ஈ. இருமும்போதும் தும்மும்போதும் துணியாலோ டிஷ்யூ தாளாலோ வாயையும் மூக்கையும் மூடிக் கொள்ளுதல்; உள்ளங்கைகளையோ புறங்கைகளையோ வைத்து மூடுதல் கூடாது. கைக்குட்டையோ டிஷ்யூவோ கைவசம் இல்லையென்றால்
, சட்டையின் கைப்பகுதி அல்லது துப்பட்டா அல்லது சேலைத் தலைப்பைப் பயன்படுத்துங்கள்; உ. பயன்படுத்திய டிஷ்யூ தாள்களை, உடனடியாக, மூடியுள்ள குப்பைத் தொட்டிகளில் போடுதல்; ஊ. பொதுவாக முகத்தையும், குறிப்பாகக் கண்கள், வாய், மூக்கு ஆகிய பகுதிகளையும் தொடும் பழக்கத்தைக் கைவிடுதல்;
அனிச்சையாகக் கை போனாலும், கையை இழுத்துக் கொள்வதையும் தொடாமல் இருப்பதையும் பயிற்சியாகவே பழகிக் கொள்ளுதல் அவசியம்; எ. உடல் நலம் சரியில்லை என்றால் உடனடியாக மருத்துவரை அணுகுதல்; சிறிய உபாதைகளானாலும், வேறு பணிகளுக்காக வெளியில் செல்லாமல் வீட்டில் இருத்தல்; ஏ. பொது வெளிகளில் எச்சில் உமிழாமல் இருத்தல்.

தனி மனித இடைவெளி: சமூக இடைவெளி என்பதை முறையாகப் புரிந்து கொள்ளுதல் முக்கியம்.
ஆங்கிலத்தில் கூறப்படுகிற ‘சோஷியல் டிஸ்டன்சிங்’ என்னும் பிரயோகம், அவ்வளவு சரியானதல்ல. தகவல் தொழில்நுட்பம் வெகுவாக மேம்பட்டிருக்கும் இக்காலத்தில், சமூக ரீதியாக யாருமே தொலைவில் இல்லை; இணையதளம், இணையம், தொலைபேசி, மின்னஞ்சல் என்று பல விதங்களில் இணைக்கப்பட்டுத்தான் இருக்கிறோம். நமக்கு இப்போதைய அவசியத் தேவை – ஃபிஸிக்கல் டிஸ்டன்சிங் – அதாவது, உடல் இடைவெளி. ஒருவரிடமிருந்து மற்றொருவா் தொலைவில் இருத்தல்.

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459