நெட்டும் சரியில்ல ...மொபைலும் பழசு...ஆன்லைன் கிளாஸ்ல எப்படிடித்தான் படிக்கிறது.... - ஆசிரியர் மலர்

Latest

 




24/05/2020

நெட்டும் சரியில்ல ...மொபைலும் பழசு...ஆன்லைன் கிளாஸ்ல எப்படிடித்தான் படிக்கிறது....


* மாணவ, மாணவிகள் புலம்பலோ புலம்பல்
* இல்லத்தரசிகள் போன் பேச முடியாமல் தவிப்பு
மதுரை: ஆன்லைன் கிளாசில் படித்து வரும் தனியார் பள்ளி மாணவிகள், சரியாக இன்டர்நெட் கிடைக்காததாலும், சில வகை பழைய செல்போன்களில் விரைவாக பாடம் படிக்க முடியாமலும் சிரமப்படுவதாக தெரிவிக்கின்றனர். கொரோனா பரவலால் தமிழகமெங்கும் பெரும்பாலான பள்ளிகளுக்கு மார்ச் 2வது வாரம் முதல் விடுமுறை விடப்பட்டது. ஊரடங்கு நாட்கள் படிப்படியாக அதிகரிக்கப்பட்டதால் 1 முதல் 9ம் வகுப்பு வரை ‘ஆல் பாஸ்’ என அரசு அறிவித்தது. தற்போதைய நிலவரப்படி ஜூலை அல்லது ஆகஸ்டில்தான் பள்ளிகள் மீண்டும் திறக்கும் வாய்ப்புகள் உள்ளன. ஆனால், சென்னை உட்பட பல மாவட்டங்களில் நாளுக்கு நாள் அதிகரிக்கும் கொரோனா பாதிப்பால், தெளிவான முடிவுகள் எடுக்க முடியாமல் அரசுகள் தவிக்கின்றன.
ஆல் பாஸ் அறிவிப்பை தொடர்ந்து, தனியார் பள்ளிகளில் ‘ஆன்லைன் கிளாஸ்’ நடத்தப்பட்டு வருகிறது. சில பள்ளிகள் ஜூம் ஆப் மூலம் நேரடி ஆன்லைன் வகுப்புகள் நடத்துகின்றன
. இதில் சிக்கல்கள் நிறைய இருப்பதால் வாட்ஸ் அப் உதவியுடன் பாடம் நடத்தும் முறைக்கு பல பள்ளிகள் மாறியுள்ளன.  இதன்படி, 7ம் வகுப்பு என்றால் மாணவ, மாணவிகளின் தாய் வாட்ஸ் அப் எண்ணை பள்ளி வாட்ஸ் அப் எண்ணில் இணைத்து ‘6th std A’ என்று ஒரு குரூப்பை உருவாக்குகின்றனர். இதில் வாட்ஸ் அப் இருக்கும் எண்களை சேர்த்து விடுகின்றனர். இல்லாதவர்களுக்கு தந்தையின் எண் அல்லது வீட்டில் மற்றவர்களின் எண்களை சேர்க்கின்றனர். வாட்ஸ் அப் இல்லையென்றால் ரொம்ப கஷ்டம். (அந்த மாணவர்கள் குஷியாக இருக்காங்களாம்).
 பின்னர், பள்ளி வகுப்பறையில் உள்ளது போலவே, ஒவ்வொரு பீரியட் ஆக பிரித்து வாட்ஸ் அப்பில் ஆடியோக்கள், வீடியோக்களை ஒவ்வொரு பாடத்திற்குரிய ஆசிரியர்கள் அனுப்புகின்றனர். அதை மாணவர்கள், ஹெட்போனில் கேட்டு செய்து, அதை போட்டோ எடுத்து அனுப்புகின்றனர். அதை டவுன்லோடு செய்து ஆசிரியர்கள் ஓகே செய்கின்றனர். இப்படியே வீட்டுப்பாடம், அசைன்மென்ட் என கிளாஸ்களை கட்டுகிறது. ஸ்நாக்ஸ் மற்றும் லஞ்ச் இடைவேளை எல்லாம் விடப்படுகிறது.
வீட்டில் இருந்தே பள்ளி பாடம்… இந்த புது அனுபவம் மாணவர்களுக்கு எப்படி உள்ளது? அவர்களிடமே கேட்போமே?
மாணவ, மாணவிகள் சிலர் கூறுகையில், ‘‘வகுப்பில் இருக்கும்போது அனைவரும் பாடம் நடத்தும்போது கவனிக்காமல் கூட இருந்து விடலாம். ஆனால், இங்கு நாம் ஆன்லைனில் இருக்கிறோமா? இல்லையா என்பதை ஆசிரியர்கள் தெரிந்து கொள்கின்றனர். இன்டர்நெட் சரியாக கிடைக்கவில்லை என்றாலும் சிக்கல்தான். பழைய மாடல் போனில் ஆடியோவை கேட்பது, வீடியோவை டவுன்லோடு செய்வதில் ரொம்ப சிரமம் இருக்கிறது. கேட்டு புரிந்து கொண்டு செய்ய ஆரம்பித்தால், அடுத்த வகுப்பு ஆசிரியர் பாடம் வந்து விடும். வகுப்பை முடித்த ஆசிரியரோ, ‘ஏன் குறித்த நேரத்தில் முடிக்கவில்லை’ என போனில் அழைத்தோ அல்லது வாட்ஸ் அப்பிலோ திட்டுகிறார்.
பள்ளியை விட, ஆன்லைன் கிளாஸ்லதான் ரொம்ப சிரமப்பட வேண்டியிருக்கிறது’’ என்றனர்
. இவங்க கதை இப்படின்னா அம்மாக்கள் கதை வேற மாதிரி போகுது…
‘‘கிளாஸ் நடக்கும்போது எங்கள் போனை பிள்ளைகள், சுமார் 4-5 மணி நேரம் வைத்துக் கொள்கின்றனர். இதனால் அவசர அழைப்புகளை எடுக்க முடிவதில்லை. நாமும் வெளியே செல்ல முடிவதில்லை. இந்த பிரச்னை எல்லாம் தீர்ந்து, பிள்ளைகளை எப்படா பள்ளிக்கு அனுப்புவோம்னு இருக்கிறது’’ என்கின்றனர் தாய்மார்கள்.
இந்த கொரோனாவால, எத்தனை பிரச்னையைத்தான் மக்கள் சந்திக்க வேண்டியிருக்கு…! ஐயோ பாவம்.
‘ஏண்டா குளிக்கலை…’
இந்த மாணவனின் கதை கொஞ்சம் பரிதாபத்திற்குரியது தான்…! மதுரையை சேர்ந்த ஒரு மாணவன் கூறுகையில், ‘‘ஒரு நாள் ஆன்லைன் கிளாஸ் போய்க்கிட்டிருந்தபோது, தவறுதலா கைபட்டு ஆசிரியர் நம்பருக்கு வீடியோ கால் போயிருச்சு… டக்குன்னு எடுத்தவரு, ‘ஏண்டா.. ஆன்லைன் கிளாஸ்னா அப்படியே வந்திருவியா… குளிச்சுட்டு நீட்டா டிரஸ் பண்ணிட்டு உட்கார மாட்டியா? நாளையில் இருந்து குளிச்சுட்டு யூனிபார்ம் போட்டு உட்கார்றே…’ என்று கூறி விட்டார். மறுநாள் முதல் தினமும் யூனிபார்மோடு படிக்கும் என்னை பார்த்து, எங்க அண்ணன் ஓவரா கலாய்க்கிறான்’’ என்றான். ஒவ்வொரு மாணவருக்கும், ஒவ்வொரு பீலிங்…!

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459