தேதி கூட தெரியல.....பிறகு எப்படி தேர்வு எழுதுவது.? பழங்குடி மாணவர்கள் குமுறல் - ஆசிரியர் மலர்

Latest

 




16/05/2020

தேதி கூட தெரியல.....பிறகு எப்படி தேர்வு எழுதுவது.? பழங்குடி மாணவர்கள் குமுறல்


கொரோனா லாக்டெளனில் நாடே செயல்பட முடியாமல் முடங்கிக் கிடக்கிறது. இந்நிலையில், வரும் ஜூன் மாதம் 1-ம் தேதி முதல் 12-ம் தேதி வரை பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு நடத்துவதாகத் தமிழக பள்ளிக் கல்வித் துறை சமீபத்தில் அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பிற்கு பல கல்வியாளர்களும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். குழந்தைகளின் பெற்றோர்கள் சார்பாக வழக்கும் தொடுத்திருக்கிறார்கள்.
இந்நிலையில் சேலம், ஈரோடு மாவட்டத்தில் உள்ள மேற்குத் தொடர்ச்சி மலையில், பத்தாம் வகுப்பு மாணவ மாணவிகள் பலரும் வசிக்கிறார்கள்.
அவர்களிடம் பேசியபோது, தமிழக பள்ளிக் கல்வித் துறை அறிவித்த பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுக்கான தேதிகூட தெரியவில்லை என்று கூறியது அதிர்ச்சியளித்தது.
மலைவாழ் குழந்தைகளுக்கு கல்வி போதிக்கும் சுடர் தொண்டு நிறுவனத்தின் இயக்குநர் நடராஜ், ”தமிழ்நாட்டில் உள்ள மலைவாழ் கிராமங்களில் டவர் கிடையாது
. போக்குவரத்து வசதியோ, தொலைத்தொடர்பு வசதியோ இல்லை. சாதாரண நாள்களிலேயே, பள்ளிக்கூடம் திறந்தால் ஒரு வாரம் கழித்து பள்ளிக்கு வருவார்கள். இந்நிலையில் மலைவாழ் குழந்தைகளை நேரடியாக தேர்வுக்கு வரச் சொல்லுவது ஏற்புடையது அல்ல.

நடராஜ்

கொரோனா பேரிடர் காலத்தில், புத்தகப் பைகளை மூட்டை கட்டி போட்டுவிட்டார்கள். பாடங்களை மறந்து பல நாள்கள் ஆகி விட்டன. வயிற்றுப் பிழைப்பிற்காக பலரும் வேலை தேடிச் சென்று விட்டார்கள். பள்ளி திறந்து ஒரு மாதம் அவர்களைத் தேர்வுக்கு தயார் செய்ய வேண்டும். அதன் பிறகே தேர்வு நடத்த வேண்டும். நேரடியாகத் தேர்வு நடத்துவது சமூக நீதிக்குப் புறம்பானது” என்றார்.
கொங்காடை மலைக் கிராமத்தைச் சேர்ந்த நந்தினி, ”கொரோனா வந்ததால் ஸ்கூலெல்லாம் மூடிட்டாங்க. எக்ஸாம் எப்பன்னு தெரியல, தேதியும் தெரியல திடீர்னு எக்ஸாம் வச்சா நாங்க எப்படி எழுதுவது. ஸ்கூல் திறந்து ஒரு மாதம் கழிச்சு எக்ஸாம் வைக்கணும்” என்றார்.
காட்டில் கிழங்கு எடுத்துவந்த பத்தாம் வகுப்பு மலைக்கிராம மாணவன், ”என் பேரு மாதேஷ். நான் கொங்காடை மலைக்கிராமத்தில் உள்ள பழங்குடியின நலப் பள்ளியில் பத்தாம் வகுப்பு படிச்சிட்டு இருக்கிறேன். 15-ம் தேதி பரீட்சைனு சொல்லறாங்க. நான் பள்ளிக்கூடம் திறந்தப்ப கொஞ்ச நாள் படித்தேன். அப்புறம் படிக்கவில்லை.
இப்ப என்னால் பரீச்சை எழுத முடியாது” என்றார்.

பரமசிவம்

தமிழ்நாடு பழங்குடியின மக்கள் சங்கத்தின் மாநிலத் தலைவர் பரமசிவம், ” பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதும் மாணவ, மாணவிகளில் 5 சதவிகித குழந்தைகள் மலைவாழ் குழந்தைகளாக இருக்கிறார்கள். இந்தக் குழந்தைகளுக்கு எந்த ஒரு அடிப்படை வசதியும் இல்லை. இவர்கள், காடுகளிலும் மலைகளிலும் வசித்துவருகிறார்கள். இந்தப் பேரிடர் காலத்திலும் அவர்கள் காட்டுக்குள் கிழங்கு மற்றும் சுள்ளி பொறுக்கவும், வெளியூர்களுக்கு கரும்பு, மூங்கில் வெட்டுவதற்கும் சென்றிருப்பார்கள்.
இவர்களுக்கு எப்போது தேர்வு என்பதே தெரியாது. இவர்களிடம் தேர்வுக்குத் தேவையான பேனா, அட்டை, போன்ற உபகரணம்கூட இருக்காது. இச்சூழலில், அவர்களை நேராக தேர்வு எழுதச் சொல்வது சரியில்லை. பள்ளி திறந்து ஒரு மாதம் அவர்களை தேர்வுக்கு தயார்செய்து தேர்வு நடத்தினால், நியாயமானதாக இருக்கும். இல்லையென்றால், அந்தக் குழந்தைகளுக்கு இழைக்கப்படும் அநீதியாகத்தான் தேர்வு அமையும்” என்றார்.
தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459