நமது பள்ளி, நமது குழந்தை, நமது குடும்பம்......75 லட்சம் வாரி வழங்கிய ஆசிரியர்கள் - ஆசிரியர் மலர்

Latest

 




17/05/2020

நமது பள்ளி, நமது குழந்தை, நமது குடும்பம்......75 லட்சம் வாரி வழங்கிய ஆசிரியர்கள்


தமிழ்நாட்டில் ஒரு சில பள்ளிகளில், கொரோனா ஊரடங்கால் ஏழ்மையில் தவிக்கும் மாணவர்களின் குடும்பங்களுக்கு அந்தந்த பள்ளிகளின் ஆசிரியர்களில் சிலர், தங்களால் இயன்ற உதவிகளை வழங்கி வருவதைப் பார்க்கிறோம். ஆனால், தஞ்சை மாவட்டத்தில் அனைத்து பள்ளிகளிலும் இதனை செயல்படுத்த, ஒரு புதுமையான முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது
.
இதற்காக, தஞ்சை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் விரிவான செயல்திட்டத்தை உருவாக்கி வெற்றிகரமாக நடைமுறைப்படுத்தியுள்ளார். இங்குள்ள அரசுப் பள்ளிகள் மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணியாற்றும் தலைமை ஆசிரியர்கள், அலுவலகப் பணியாளர்கள் உட்பட அனைவரும் தாமாக முன்வந்து, தங்கள் மாணவர்களுக்கு உதவும் வகையில் ‘நமது பள்ளி, நமது குழந்தைகள், நமது குடும்பம்’ என்ற ஓர் புதுமையான ஊக்குவிப்பு திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது.


உதவிப்பொருள்கள்

ஒரு காலத்தில் ஆசியர்களுக்கும் மாணவர்களுக்கும் இடையேயான உறவு என்பது ஓர் குடும்பம் போல் பாசப் பிணைப்போடு இருந்தது.
அப்பொழுதெல்லாம் பெரும்பாலான ஆசிரியர்கள், தங்கள் பள்ளியில் பயிலும் மாணவர்களை அந்தளவிற்கு நேசித்தார்கள். மிகுந்த கண்டிப்போடு இருந்தாலும் கூட, அவர்களது நலனில் அதீத அக்கறை காட்டுவார்கள். மாணவர்களின் குடும்பத்தோடும் இணக்கமான நட்பு இருக்கும். வறுமையில் வாடும் மாணவர்களுக்கு உதவுவதற்காக, மாதந்தோறும் தங்களது சம்பளத்தில் ஒரு குறிப்பிட்ட தொகையைச் செலவு செய்த ஆசிரியர்களும் அப்போது இருந்தார்கள். ஆனால், காலப்போக்கில் அதையெல்லாம் காண்பது அரிதாகிவிட்டது. இந்நிலையில்தான், தற்போது கொரோனா ஊரடங்கால், அந்தப் பழைய காட்சிகள் மீண்டும் ஒளிவிடத் தொடங்கியுள்ளது.
ஊரடங்கால் வருவாயை இழந்து தவிக்கும் ஏழை எளிய மாணவர்களின் குடும்பங்களுக்கு, ஒரு சில பள்ளிகளின் ஆசிரியர்கள் தங்களால் இயன்ற உதவிகளை வழங்கி வருகிறார்கள்
. ஆனால், தமிழ்நாட்டில் வேறு எந்த மாவட்டத்திலும் இல்லாத அளவுக்கு, தஞ்சை மாவட்டத்தில் பெரும்பாலான பள்ளிகளில் இந்த மனிதநேய உதவிகள் சென்றடைகிறது.
இதுகுறித்து நம்மிடம் நெகிழ்ச்சியோடு பேசிய தஞ்சை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் ராமகிருஷ்ணன், “அரசுப் பள்ளிகள் மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலக்கூடிய மாணவர்களில் பெரும்பாலானவங்க, ஏழை மாணவர்கள். ஊரடங்கால், இவங்களோட குடும்பங்கள் அன்றாட ஜீவாதாரத்துக்கு கஷ்டப்பட்டுக்கிட்டு இருக்காங்க. இவங்களுக்கு உதவுறதுக்காக, ‘நமது பள்ளி, நமது குழந்தைகள், நமது குடும்பம்”ங்கற பேர்ல இந்தத் திட்டத்தை அறிமுகப்படுத்தினேன். இதுக்காக வாட்ஸ்அப் குரூப்களை உருவாக்கினோம்.
தலைமை ஆசிரியர், ஆசிரியர்கள், பள்ளி அலுவலகப் பணியாளர்கள் எல்லாம் தங்களால் இயன்ற உதவிகளை செய்யணும்னு விரிவான அறிவிப்பு வெளியிட்டோம்.
தங்களது பள்ளியில் உள்ள ஏழை எளிய மாணவர்களை நீங்களே தேர்வு செஞ்சி, அவங்களோட குடும்பங்களுக்கு தரமான அரிசி, மளிகைப்பொருள்கள் வழங்குங்க, அதை போட்டோ எடுத்து வாட்ஸ்அப் குரூப்ல போடுங்கன்னு சொன்னோம். ஒவ்வொரு பள்ளியிலும் எவ்வளவு நிதி சேர்ந்தது, என்னென்ன பொருள்கள், எவ்வளவு வாங்கப்பட்டதுங்கற தகவல்களையும் எங்களுக்கு தெரியப்படுத்தச் சொன்னோம்.


தஞ்சை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் ராமகிருஷ்ணன்

ஒரு நபர், குறைந்தபட்சம் 500 ரூபாய் பங்களிப்பு செய்ங்கன்னு சொல்லியிருந்தோம். ஆனால், இது கட்டாயம் கிடையாது, மனிதாபிமான உதவிதான். விருப்பம் உள்ளவங்க பங்களிப்பு செலுத்துங்கன்னுதான் சொல்லியிருந்தேன். ஆனால் ஆச்சர்யம்! தஞ்சை கல்வி மாவட்டத்தின் பெரும்பாலான ஆசியர்கள் மனமுவந்து பங்களிப்பு செஞ்சிருக்காங்க
. ஒரு சிலர், பத்தாயிரம் ரூபாய்கூட போட்டுருக்காங்க. உயர் தரமான மளிகைப் பொருள்களை வாங்கிக் கொடுத்திருக்காங்க. கிராமப்புற பள்ளிக்கூடங்கள்ல தஞ்சை மாவட்ட ஆட்சியர் கோவிந்தராவ், மூன்று கட்டமாக இந்த திட்டத்தைத் தொடங்கிவைத்தார்.

தொடக்கப்பள்ளி, நடுநிலைப் பள்ளி, உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் பயிலக்கூடிய  15,045 ஏழை மாணவர்களின் குடும்பங்களுக்கு, இதுவரை 75.52 லட்சம் ரூபாய் மதிப்புள்ள உதவிப் பொருள்கள் வழங்கியிருக்கோம். 
 ஆசிரியர்கள், அலுவலகப் பணியாளர்கள், மிகுந்த ஆர்வத்தோடு இதுல பங்களிப்பு செலுத்திக்கிட்டே இருக்காங்க. இந்த உதவிகள் இன்னும் தொடர்ந்துகிட்டே இருக்கும். இது எனக்கு ஒரு நெகிழ்ச்சியான அனுபவம்” என உற்சாகமாகத் தெரிவித்தார்.
தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459