New
ராஜஸ்தான் மாநிலம் கோட்டாவுக்கு நீட், ஜே.இ.இ போட்டித் தேர்வுக்கான பயிற்சி வகுப்பில் சேர்ந்த மாணவ மாணவிகள் மற்றும் அவர்களின் பெற்றோர் தமிழக அரசின் உதவியால் மாநில எல்லையான ஓசூருக்கு இன்று அதிகாலை வந்தனர்.
தமிழ்நாட்டில் சென்னை, கடலூர், பாண்டிச்சேரி, சேலம், நாமக்கல் கோயம்புத்தூர், திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் மற்றும் அவர்களின் பெற்றோர்கள் என 78 பேர் மூன்று பேருந்துகளில் இன்று அதிகாலை கிருஷ்ணகிரிக்கு வந்தனர். இவர்களை பாஜக நிர்வாகிகள் வரவேற்று காலை உணவுகளை வழங்க ஏற்பாடு செய்தனர்.
பின்னர் இவர்கள் சென்னை மார்க்கமாகவும் கோயம்புத்தூர் மார்க்கமாகவும் இருவேறு பேருந்துகளில் அவரவர் வீடுகளுக்குத் திரும்பினர்.
ராஜஸ்தானில் இருந்து திரும்பிய தமிழர்கள் தங்கள் சொந்த செலவிலேயே வந்ததாகவும் பேருந்துக்காக ஒருவருக்கு ரூ.6,500 செலவு ஆனதாகவும் தெரிவித்துள்ளனர். தங்களை ராஜஸ்தானிலிருந்து தமிழகம் திரும்ப நடவடிக்கை எடுத்த தமிழக அரசுக்கு அவர்கள் நன்றியை தெரிவித்துக் கொண்டனர்.