கொரோனா தொற்று பரவுவதைக் கட்டுப்படுத்த , தற்போது 3 ம் கட்ட ஊரடங்கு அமலில் உள்ளது. ஊரடங்கு தொடங்கியவுடன், அனைத்து அரசாங்க மற்றும் தனியார் அமைப்புகளும் வீட்டிலிருந்து வேலை செய்யும் முறையைத் தேர்ந்தெடுத்தன.
இந்நிலையில் மத்திய அரசு அலுவலகங்களில் எதிர்காலத்தில் மாறுபட்ட வருகைப்பதிவு மற்றும் மாறுபட்ட வேலை நேரங்களை தொடர்ந்து செயல்படுத்த முடிவெடுக்கப்பட்டுள்ளது. பெரும்பாலான அரசாங்க அலுவலகங்கள் மற்றும் அமைச்சகங்கள் சுமார் 30 சதவீத ஊழியர்கள் மற்றும் துணைச் செயலாளர் நிலை அதிகாரிகள் மற்றும் அதற்கு மேற்பட்டவர்கள் வரையறுக்கப்பட்ட ஊழியர்களுடன் பணியாற்றத் தொடங்கப்பட்டன.
மத்திய பணியாளர் அமைச்சகம் வீட்டிலிருந்து வேலை என்பதை நடைமுறைப்படுத்த ஒரு குறிப்பாணையை புதன்கிழமை வெளியிட்டது. இந்தக் குறிப்பாணை அனைத்து மத்திய அமைச்சகங்களுக்கும் மத்திய அரசு அலுவலகங்களுக்கும் அனுப்பப்பட்டுள்ளன.இந்தக் குறிப்பாணை ஆலோசனைக்கான ஒரு வரைவுதான், அனைத்து அமைச்சகங்கள் மற்றும் துறைகளுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ள இந்த வரைவு குறித்து அவர்கள் பதிலளிக்க வேண்டும்.
மே 21 ஆம் தேதிக்குள் வீட்டிலிருந்து இருந்து வேலை செய்வது குறித்து பணியாளர் அமைச்சகத்திடம் தங்கள் கருத்தைப் பகிர்ந்துகொள்ள வேண்டும், மே 21-ம் தேதிக்குள் கருத்துகள் பெறப்படாவிட்டால், உங்கள் அமைச்சகமும் துறையும் முன்மொழியப்பட்ட வரைவுடன் உடன்படுகின்றன என்று கருதப்படும் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.