2 ஆண்டுகளில் 2461 மாணவர்கள் இடைநிற்றல் : என்ன நடக்கிறது ? - ஆசிரியர் மலர்

Latest

 




15/05/2020

2 ஆண்டுகளில் 2461 மாணவர்கள் இடைநிற்றல் : என்ன நடக்கிறது ?


கடந்த ஆண்டு நவம்பர் மாதம், கேரளாவைச் சேர்ந்த மாணவி பாத்திமா லத்தீப் சென்னை ஐ.ஐ.டியில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் நாட்டையே அதிர்ச்சியில் ஆழ்த்தியது. மாணவியின் தற்கொலைக்கு பேராசிரியர் ஒருவர் கொடுத்த அழுத்தமே காரணம் என்றும் சொல்லப்பட்டது. மத்திய கல்வி நிறுவனமான ஐ.ஐ.டி-யில் மாணவர்கள் தற்கொலை செய்து கொள்ளும் சம்பவங்கள் ஒருபுறம் என்றால், படிப்பைப் பாதியில் விட்டுச்செல்லும் அவலமும் அதிகரித்து வருகிறது.

ஐ.ஐ.டி-யில் தற்கொலை செய்துகொண்ட பாத்திமா.

கடந்த ஆண்டு (2019) மனிதவள மேம்பாட்டு அமைச்சகம், மாநிலங்களவையில் ஐ.ஐ.டி-யில் மாணவர்கள் இடை நிற்றல் தொடர்பான ஒரு புள்ளி விவரத்தைச் சமர்ப்பித்தது.

Vikatan RTI

‘கடந்த 2 ஆண்டுகளில் மட்டும் நாடு முழுவதுமுள்ள 23 ஐ.ஐ.டி கல்வி நிறுவனங்களில், 2,461 மாணவர்கள் படிப்பைப் பாதியில் விட்டுச்சென்றுவிட்டனர்.
டெல்லி ஐ.ஐ.டி-யில் மட்டும் 782 மாணவர்கள், காரக்பூர் ஐ.ஐ.டி-யில் 622 மாணவர்கள், மும்பை ஐ.ஐ.டி-யில் 263 மாணவர்கள், கான்பூர் ஐ.ஐ.டி-யில் 190 மாணவர்கள், சென்னை ஐ.ஐ.டியில் 128 மாணவர்கள் படிப்பை முடிக்காமல் பாதியிலேயே இடை நின்றதாக அந்த அறிக்கை சொன்னது.
சென்னை, மும்பை, கான்பூர், குவஹாத்தி ஆகிய நான்கு ஐ.ஐ.டி-களில் இருந்தும் Ph.D ஆராய்ச்சி படிப்பை 1,234 பேர் பாதியில் விட்டுச் சென்றிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது.

விகடன் ஆர். டி.ஐ

இதுகுறித்து கூடுதல் தகவல் அறிவதற்காக விகடன் RTI குழு களமிறங்கியது.

தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின்கீழ் சென்னை, மும்பை , கான்பூர், குவஹாத்தி ஆகிய நான்கு ஐ.ஐ.டி கல்வி நிறுவனங்களில் இருந்து இடைநின்ற மாணவர்கள் குறித்த விரிவான விவரங்களைக் கோரியிருந்தோம். 2014-ம் ஆண்டில் இருந்து 2018 வரை வரையில் மாணவர்களின் இடைநிற்றல் விவரங்களை அந்தந்த கல்வி நிறுவனங்களில் உள்ள தலைமை தகவல் அலுவலர்கள் நமக்கு வழங்கியுள்ளார்கள்.
அதில் சென்னை, மும்பை, கான்பூர், குவஹாத்தி ஆகிய நான்கு ஐ.ஐ.டி-களில் இருந்தும் Ph.D ஆராய்ச்சிப் படிப்பை 1,234 பேர் பாதியில் விட்டுச் சென்றிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது.
இந்த 4 ஐ.ஐ.டி-களில் மட்டுமே இவ்வளவு ஆராய்ச்சி மாணவர்கள் இடை நிற்றல் என்றால், இந்தியாவில் உள்ள அனைத்து ஐ.ஐ டி நிறுவனங்களிலும் கணக்கெடுத்தால்..?
இந்த 4 ஐ.ஐ.டி-களில் முதுநிலை படிப்புகளான, எம்.டெக் , எம்.எஸ்ஸி, எம்.டிசைன் உள்ளிட்ட படிப்புகளில் இருந்து பாதியில் நின்ற மாணவர்கள் மொத்தம் 1,338 பேர். இளநிலை படிப்புகளிலும்கூட நிறைய மாணவர்கள் இடைநின்றுள்ளனர்.
மாணவர்களின் இந்த இடைநிற்றலுக்கு கல்லூரிப் பேராசிரியர்களின் ஒடுக்குமுறை, நிர்வாகங்களின் அழுத்தம், சாதிய, மதப் பாகுபாடு போன்றவையே காரணம் எனக் குற்றம் சாட்டுகிறார்கள் கல்வியாளர்களும் மாணவர்களும்.



இது குறித்து மைசூர் ஜே.எஸ்.எஸ் அறிவியல் மற்றும் தொழில் நுட்ப பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் ஜவகர் நேசன் நம்மிடம் பேசினார். “ஐ.ஐ.டி நிறுவனங்களிலிருந்து இடைநிற்பவர்களில் பெரும்பாலானோர் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின பிரிவைச் சேர்ந்தவர்கள்.
ஆங்கிலம் சரியாக பேசவராது என்றால் பேராசிரியர்கள், சக மாணவர்கள் உள்ளிட்ட பலரும் புறக்கணிக்கிறார்கள். அந்தப் புறக்கணிப்பை ஏற்க முடியாத மாணவர்களில் ஒரு சிலர் தற்கொலை செய்து கொள்கிறார்கள். ஒரு சிலர் படிப்பைப் பாதியிலேயே விட்டுச் செல்கிறார்கள். இதுதான் பெரும்பாலான ஐ.ஐ.டி கல்வி நிறுவனங்களில் நடக்கிறது…” என்கிறார் அவர்.

ஜவகர் நேசன் துணைவேந்தர்

மதுரை காமராஜர் பல்கலைக்கழக பேராசிரியர் முரளி இதுகுறித்து பேசுகையில், “ஐ.ஐ.டி கல்வி நிறுவனங்களில் ஆராய்ச்சி மாணவர்களுக்கு மன அழுத்தம் அதிகமாக இருக்கும். இதில் பேராசிரியர்கள் நெருக்கடியும் அவர்களுக்குச் சேர்ந்துவிடுகிறது. அதற்கு உதாரணமாக என்னுடைய நண்பருடைய மகனே பாதிக்கப்பட்டுள்ளார். அவர் ஓர் ஆய்வியல் மாணவர்.

முரளி.பேராசிரியர்

அந்த மாணவருடைய கைடு (பேராசிரியர்) அவரை புறக்கணிப்பது, அவமானப்படுத்துவது போன்ற செயல்களைத் தொடர்ந்து அந்த மாணவர் மீது நிகழ்த்தி வந்துள்ளார். அதன் விளைவாக அந்த மாணவர் தற்கொலை செய்துகொண்டார்.
இதற்கெல்லாம் போதுமான ஆதாரங்கள் இருக்காது. உளவியல் ரீதியாகத் தாக்கப்படுகிற விஷயம் என்பதால் சட்டரீதியாகவும் நடவடிக்கை எடுக்க முடியவில்லை.

ஐஐடி இடைநிற்றல்

இது சென்னை ஐ.ஐ.டி-யில் மட்டுமல்ல. இந்தியாவில் உள்ள அனைத்து ஐ.ஐ.டி கல்வி நிறுவனங்களிலும் இதுதான் நடக்கிறது. இங்குள்ள பேராசிரியர்களுக்கு சமூக கல்வியைப் பற்றிய போதிய விழிப்புணர்வு இல்லை. அதனால்தான் மாணவர்களை துன்புறுத்துவது, அவமானப்படுத்துவது போன்ற செயல்களில் ஈடுபடுகின்றனர்.
இதுமாதிரி, மாணவர்கள் மேல் நிகழ்த்தப்படும் வன்முறைகளைக் களைய அனைத்து ஐ.ஐ.டி-களிலும் தனிக் குழு அமைக்கப்பட்டது. அந்தக் குழு என்ன செய்துகொண்டிருக்கிறது என்பதுதான் தெரியவில்லை” என்கிறார்.
இது குறித்து ஐ.ஐ.டி மாணவர் ஒருவரிடம் பேசினோம். “ஆராய்ச்சி மாணவர்களுக்குப் பலவகையிலும் நெருக்கடி இருப்பது உண்மைதான். சாதிய, பொருளாதார விஷயங்கள் இந்த மாணவர்களைக் கடுமையாகப் பாதிக்கிறது.
முதுகலைப் படிக்கும் மாணவர்கள் இடைநிற்றலுக்கு வேறு சில காரணங்கள் உண்டு. படிக்கும்போதே சிலருக்கு வேலை கிடைத்துவிடுகிறது. அதனால் அவர்கள் படிப்பை பாதியில் விட்டுச் செல்கின்றனர்” என்றார்.


சென்னை ஐஐடி

இதுகுறித்து கருத்தறிய சென்னை ஐ.ஐ.டி நிர்வாகத்தைத் தொடர்புகொண்டோம்
. அங்குள்ள பொதுமக்கள் தொடர்பு அதிகாரி சாய்ராம், “உங்களுடைய கேள்விகளை மெயிலாக அனுப்புங்கள்” என்று கூறியிருந்தார். அவர் தந்த மின்னஞ்சல் முகவரிக்கு கேள்விகளை அனுப்பியிருந்தோம். ஆனால், இதுவரை பதிலில்லை. பதில் அளிக்கப்படும்பட்சத்தில் அதையும் வெளியிடத் தயாராக இருக்கிறோம்.
உலக ரேங்கிங் பட்டியல்களிலெல்லாம் ஐ.ஐ.டி-கள் இடம் பிடிக்கின்றன. மாணவர் இடைநிற்றல் சம்பவங்கள், அவற்றின் புகழுக்குக் கறையாகி விடாதா? நிர்வாகங்கள் கூடுதல் கவனம் காட்ட வேண்டிய விஷயம் இது!
தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459