நாகையைச் சேர்ந்த மருத்துவர் ஒருவருக்கு கரோனா நோய்த் தொற்று - ஆசிரியர் மலர்

Latest

 




09/04/2020

நாகையைச் சேர்ந்த மருத்துவர் ஒருவருக்கு கரோனா நோய்த் தொற்று



நாகையைச் சேர்ந்த மருத்துவர் ஒருவருக்கு கரோனா நோய்த் தொற்று இருப்பது வியாழக்கிழமை உறுதி செய்யப்பட்டது. இதன் மூலம், நாகை மாவட்டத்தில் கரோனோ நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 12-ஆக உயர்ந்துள்ளது. 


நாகை மற்றும் மயிலாடுதுறை ஆகிய பகுதிகளிலிருந்து புதுதில்லிக்குச் சென்று திரும்பிய சுமார் 32 பேர் தனிமைப்படுத்தப்பட்டு, அண்மையில் பரிசோதனைக்கு உள்படுத்தப்பட்டனர். இதில், 5 பேருக்கு கரோனா நோய்த் தொற்று இருந்தது ஏப்ரல் 3-ஆம் தேதியும், 6 பேருக்கு நோய்த் தொற்று இருந்தது ஏப். 5-ஆம் தேதியும் உறுதி செய்யப்பட்டது.
இதையடுத்து, அவர்களின் வசிப்பிடங்கள் அமைந்துள்ள பகுதிகள் தடை செய்யப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்டு, பாதுகாப்பு வளையத்துக்குள் கொண்டு வரப்பட்டு கண்காணிக்கப்படுகின்றன. இந்த நிலையில், நாகை காடம்பாடியைச் சேர்ந்த மருத்துவர் ஒருவருக்கு கரோனா நோய்த் தொற்று இருப்பது வியாழக்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, அவரது மருத்துவ ஆலோசனை மையம் மூடப்பட்டது. 

தனது உடல் நிலையில் ஏற்பட்ட மாற்றங்களை உணர்ந்த அந்த மருத்துவர், தாமாக முன்வந்து தன்னை பரிசோதனைக்கு உள்படுத்திக் கொண்டதாகவும், தொடக்க நிலையிலேயே தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பதால், அவருக்கு பெரிய அளவிலான எந்த பாதிப்பும் இல்லை என மருத்துவத் துறை வட்டாரங்கள் தெரிவித்தன.
www.Asiriyarmalar.com
தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459