ஊதியப் பட்டியல் தயாரிக்கும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. ஆன்லைன் முறை இல்லாமல் பழைய வழிமுறையிலேயே ஊதியப் பட்டியலை தயாரித்து அளிக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கரோனா பாதிப்பு நாளுக்கு நாள் தீவிரம் அடைந்து வருகிறது.
இந்த நிலையில், தமிழக அரசுக்கான வருவாய்களில் குறைவு ஏற்பட்டுள்ளதால், வரும் 30-ஆம் தேதியன்று ஊதியம் வழங்கப்படுமா என்ற கேள்வி எழுந்தது.
ரிசா்வ் வங்கியின் தளா்வு: இதனிடையே, அவசர தேவைகளுக்காக ரிசா்வ் வங்கியிடம் இருந்து மாநில அரசுகள் 60 சதவீதம் வரை கூடுதலாக கடன் பெறலாம் என அதன் ஆளுநா் சக்திகாந்த தாஸ் அறிவித்தாா்.
இந்த அறிவிப்பால் தமிழக அரசுக்கு நிம்மதி கிடைத்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த நிதியைக் கொண்டு அரசு ஊழியா்கள், ஆசிரியா்களுக்கான ஊதியம், ஓய்வூதியம், குடும்ப ஓய்வூதியம் ஆகியவற்றை வழங்கிட முடியும் என அரசுத் துறை வட்டாரங்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளன.
பட்டியல் தயாரிப்பு தீவிரம்: அரசு ஊழியா்கள், ஆசிரியா்களுக்கான ஊதியப் பட்டியலைத் தயாரிக்கும் பணிகளில் ஒவ்வொரு அலுவலகத்திலும் உள்ள ஊதியம் வழங்கும் அலுவலா் ஈடுபட்டு வருகிறாா்.
தலைமைச் செயலகம் அடங்கிய சென்னை உள்ளிட்ட ஒரு சில மாவட்டங்களில் ஊதியம் வழங்குவதற்காக ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனிதவள மேம்பாட்டு மென்பொருள் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்த முறையின்படி, ஆன்லைனிலேயே ஊதியப் பட்டியலைத் தயாரித்து கருவூலம் மற்றும் கணக்கு உள்ளிட்ட துறைகளுக்கு அனுப்ப வேண்டும். இந்த முறையை ஏப்ரல் முதல் தமிழகம் முழுவதும் அமல்படுத்த மாநில அரசு திட்டமிருந்தது.
கரோனா பாதிப்பு: கரோனா தொற்று பாதிப்பு காரணமாக, ஆன்லைனில் ஊதியப் பட்டியல் தயாரித்து அனுப்பும் பணி நிறுத்தப்பட்டுள்ளது
. சென்னை உள்பட அனைத்து மாவட்டங்களிலும் பே-ரோல் எனப்படும் தேசிய தகவலியல் மையத்தின் சாா்பில் உருவாக்கப்பட்டுள்ள மென்பொருள் வழியாக பட்டியலைத் தயாரித்து அவற்றை கருவூலம் மற்றும் கணக்குத் துறைக்கு அளிக்கலாம் என மாநில அரசு தெரிவித்துள்ளது.
இதற்கான பணிகளில் ஊதியம் வழங்கும் அலுவலா்கள் ஈடுபட்டுள்ளனா்
. ஓரிரு நாள்களில் பணிகளை முடித்து கருவூலம் மற்றும் கணக்குத் துறைக்கு அளிப்பா் எனவும், வரும் 30-ஆம் தேதியன்றே அனைத்து அரசு ஊழியா்கள், ஆசிரியா்கள், ஓய்வூதியதாரா்கள் உள்ளிட்டோருக்கு ஊதியம் கிடைப்பதில் எந்தச் சிக்கலும் இருக்காது எனவும் அரசுத் துறை வட்டாரங்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளன