கொரோனா ஊரடங்கால் வெளிநாட்டில் ஆன்லைனில் படிக்க 1 லட்சம் இந்திய மாணவர்கள் படையெடுப்பு - ஆசிரியர் மலர்

Latest

 




30/04/2020

கொரோனா ஊரடங்கால் வெளிநாட்டில் ஆன்லைனில் படிக்க 1 லட்சம் இந்திய மாணவர்கள் படையெடுப்பு


* 933 பல்கலையில் 9-க்கு மட்டுமே ஆன்லைன் வழி கற்றலுக்கு அனுமதி
* யுஜிசி-யின் தெளிவற்ற கொள்கையால் தள்ளாடும் உயர்கல்வித்துறை
புதுடெல்லி: கொரோனா ஊரடங்கால் வெளிநாட்டில் ஆன்லைனில் படிக்க 1 லட்சம் இந்திய மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர். 3.8 கோடி உயர்கல்வி மாணவர்கள் தவித்து வருகின்றனர். நாடு முழுவதும் 933 பல்கலையில் 9-க்கு மட்டுமே ஆன்லைன் வழி கற்றலுக்கு யுஜிசி அனுமதி அளித்துள்ளதால் நாட்டின் உயர்கல்வித்துறை தள்ளாடி வருகிறது. இங்கிலாந்து, அமெரிக்கா, ஆஸ்திரேலியா மற்றும் கனடா உள்ளிட்ட ஆங்கில மொழி பேசும் நாடுகளில், ஆன்லைன் வழி கற்றலுக்கு முக்கியத்தும் அளிக்கப்படுகிறது. ஆசிரியரும், மாணவரும் தங்களுக்கான கம்ப்யூட்டர் முன் அமர்ந்து கொள்வார்கள். ‘வொயிட்போர்டு’ தொழில்நுட்பத்தின் மூலமாக கற்பித்தல் நடைபெறுகிறது.
அதில், கம்ப்யூட்டர் ப்ரொஜெக்டருடன், வொயிட் போர்டும் இணைக்கப்பட்டிருக்கும். அந்த ப்ரொஜெக்டர், பேனா, விரல், தொடுஊசி உள்ளிட்ட சாதனங்களைக் கொண்டு,
ஆசிரியரும் மாணவரும், தங்களுக்கான உரையாடலை தடையின்றி தொடர முடியும். இந்த தகவல்தொழில்நுட்ப யுகத்தில் ஆன்லைன் கற்பித்தல் முறைகள் மக்களிடையே, அதுவும் முன்னேறிய மேலை நாடுகளில் பிரபலமாகி வந்தாலும், வளரும் மற்றும் ஏழை நாடுகளை போய் சேரவில்லை என்பதே நிதர்சனம். ஆனால், இன்று உலகம் முழுவதும் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ள கொரோனா வைரஸ் தாக்கத்தால் 90 சதவீத நாடுகள் ஊரடங்கில் உள்ளன.
பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டதால் கிட்டத்தட்ட 175 கோடி பள்ளி, கல்லூரி மாணவர்கள் வீடுகளிலேயே முடங்கிக் கிடக்கின்றனர்
என்று யுனிசெப் அமைப்பு தெரிவித்துள்ளது. இருந்தும், ஆன்லைன் வழி கற்றல் முறையில் மாணவர்களை தயார்படுத்த யுனிசெப் அமைப்பு உலக நாடுகளை கேட்டுக் கொண்டுள்ளது. நிலைமை இப்படி இருக்க, இந்திய கல்வி முறையில் ஆன்லைன் வழி கற்றல் முறை, அரசுகளால் நடத்தப்படும் பள்ளி, கல்லூரிகளுக்கு சாத்தியமா என்றால், இல்லை என்றே சொல்ல வேண்டும். அங்கொன்றும் இங்ெகான்றுமாக ஆன்லைன் வழி கற்றல் எப்படி? என்ற முறையில் சில பள்ளி, கல்லூரிகளின் ஆன்லைன் வகுப்புகள் நடத்தப்படுகின்றன.
தற்போதைய நிலையில் பல்கலைக்கழக மானியக் குழுவானது (யுஜிசி) நாடு முழுவதுமுள்ள 993 பல்கலைக்கழகங்களில் ஏழு பல்கலைக்கழகங்களுக்கு மட்டுமே ஆன்லைன் படிப்புகளைத் தொடங்க அனுமதி அளித்துள்ளது. யுஜிசி ஆன்லைன் கல்வியை 2015ல் தடை செய்தது; ஆனால் புதிய வழிகாட்டுதல்களை உருவாக்கி 2018ல் ஆன்லைன் வழி கற்றலுக்கு அனுமதி அளித்தது
. கொரோனாவால் ஏற்பட்ட ஊரடங்கால் சில வெளிநாட்டு பல்கலைக்கழகங்களில், இந்தியாவை சேர்ந்த கிட்டத்தட்ட ஒரு லட்சம் மாணவர்கள் ஆன்லைன் படிப்புகளுக்கு பதிவு செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன்மூலம் யுஜிசி 2018ம் ஆண்டு வகுத்த ஆன்லைன் விதிமுறைகளின் முட்டாள்தனம் வௌிப்பட்டுள்ளது அம்பலமாகியுள்ளது.
எனவே, அங்கீகாரம் பெற்ற அனைத்து
பல்கலைக்கழகங்களிலும் ஆன்லைன் படிப்புகளைத் தொடங்க உடனடியாக யுஜிசி அனுமதி அளிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. யுஜிசி, ஆன்லைன் வழி கற்றலை ஊக்குவிக்கவில்ைல என்றால், இந்திய மாணவர்களின் எதிர்காலம் பாதிப்புக்கு உள்ளாகும். இந்திய பல்கலைக்கழகங்களில் சுமார் 38 மில்லியன் (3.8 கோடி) மாணவர்கள் உள்ளனர்; இவர்களில், 3.4 கோடி பேர் பல்கலைக்கழக வளாகங்களில் பயின்று வருகின்றனர்.
40 லட்சம் பேர் தொலைதூரக் கல்வியில் படிக்கின்றனர். 25,000 மாணவர்கள் மட்டுமே ஆன்லைன் கல்வியைத் தேர்வு செய்துள்ளனர்.
2018ல் புதிய வழிகாட்டுதல்களுடன் யுஜிசி ஆன்லைன் படிப்புகளுக்கு ஏழு பல்கலைக்கழகங்களுக்கு மட்டுமே உரிமம் வழங்கியுள்ளதால், பல பல்கலைக்கழகங்கள் ஆன்லைன் வழி கற்றலுக்கான கட்டமைப்பை ஏற்படுத்த முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளன. இந்த விஷயத்தில் மூன்று முக்கியமான கேள்விகள் எழுகிறது. அதாவது, வெளிநாட்டு பல்கலைக்கழகங்களில் சேர்ந்து ஆன்லைன் படிப்பில் சேர்ந்து படிக்க இந்திய மாணவர்கள் விண்ணப்பிக்கும் போது, ​அனைத்து அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகங்களும்
ஏன் ஆன்லைன் படிப்புகளைத் தொடங்க யுஜிசி அனுமதிக்கவில்லை? அதேநேரத்தில் தொலைதூரக் கல்வி மற்றும் ஆன்லைன் கற்றலுக்கான உரிமத்தை ஏன் வேறுபடுத்துவது?
பாடத்திட்டங்கள், வடிவமைப்பு, வழங்கல் மற்றும் ஆன்லைன் படிப்புகளின் மதிப்பீட்டில் பல்கலைக்கழகங்களுக்கு ஏன் தளர்வுகளை அனுமதிக்கக் கூடாது? என்ற கேள்வியும் எழுகிறது. மேலும், இந்திய பல்கலைக்கழகங்களில் ஆன்லைனில் படிப்பதில் செலவு, தரம், மற்றும் வேலைவாய்ப்பு ஆகியவற்றில் சிக்கல்கள் உள்ளன. ஏனெனில் யுஜிசி விதிமுறைகள் ஆன்லைன் வழி கற்றலுக்கான முக்கியத்துவத்தை தடுக்கின்றன. இதுகுறித்து, பல்கலைக்கழக மூத்த பேராசிரியர் கூறுகையில், ‘யுஜிசி 2018ல் கொண்டு வந்த ஆன்லைன் வழி கற்றல் ஒழுங்குமுறைகளில் ஐந்து வழிகளில் மாற்றம் செய்ய வேண்டும்.
உரிமத்தை கட்டுப்படுத்துகின்ற 4 (1) (i), 4 (1) (ii), 4 (1) (iii) மற்றும் 6 ஆகிய பிரிவுகளை அகற்றி, விருப்பப்படி ஒப்புதல் செயல்முறையை பரிந்துரைத்து,
அவற்றின்படி ஆன்லைன் திட்டங்களை வடிவமைக்க வேண்டும். ஆன்லைன் பாடத்திட்டத்தில் புதுமை, நெகிழ்வுத்தன்மை மற்றும் பொருத்தத்தை அனுமதிக்கும் பிரிவு 4 (2)-ஐ மாற்றியமைக்க வேண்டும். இதனால், பல்கலைக்கழக படிப்புகளின் பட்டியலில் தொழில் சார்ந்து முக்கியத்துவம் அளிக்க முடியும். பிரிவு 7 (2) (i) மாநில நிதியுதவி முறையில், பல்கலைக்கழகங்கள் சிறந்த தொழில்நுட்ப தளங்களுடன் உருவாக்க அனுமதிக் வேண்டும்.
மாணவர் சேர்க்கைகளை அனுமதிக்க பிரிவு 7 (3) (viii)-ஐ மாற்ற வேண்டும். தொழில்நுட்பம் சார்ந்த தேவை மற்றும் நம்பகத்தன்மையை அனுமதிக்கும் பிரிவு 7 (2) (vi) ஐ 4 (4) (iv) மாற்ற வேண்டும்
. இத்தனை சிக்கல்களையும் தீர்த்தால்தான், இந்தியாவில் ஆன்லைன் வழி கற்றல் சாத்தியம்’ என்றார்.
செப்டம்பரில் தான் கல்லூரிகள் திறப்பு 
கொரோனா நோய் தொற்றுதலைக் கட்டுபடுத்தும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கடந்த மார்ச் 16ம் தேதி முதல் கல்வி நிறுவனங்கள் மூடப்பட்டன.
இதனால் பள்ளி, கல்லூரிகள் தேர்வுகள், பொதுத்தேர்வுகள் அனைத்தும் ஒத்திவைக்கப்பட்டன. ஏப். 14ம் தேதி வரையில் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு, மே 3ம் தேதி வரையில் நீட்டிப்பு செய்யப்பட்டது. இதனிடையே கல்லூரிகள் திறப்பு, தேர்வுகள் நடத்துவது குறித்து யுஜிசி தரப்பில் உயர்மட்ட ஆலோசனைக் குழு அமைக்கப்பட்டது.
அந்த குழுவின் பரிந்துரைபடி, ‘அடுத்த கல்வியாண்டிற்கான வகுப்புகள் செப்டம்பர் மாதம் தொடங்கலாம்’ என்று தெரிவித்துள்ளது.
வழக்கமாக ஒவ்வொரு ஆண்டும் ஜூலை மாதத்தில் கல்வியாண்டு தொடங்கும்.
ஆனால், இந்தாண்டு கொரோனா வைரஸ் காரணமாக இன்னும் செமஸ்டர் தேர்வு, நுழைவுத் தேர்வுகள் நடத்தவில்லை. அதன் பிறகுதான் கல்வியாண்டு தொடங்கும். இன்றைய நிலையில், 2020-21 கல்வியாண்டு தொடங்குவது முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது
. யுஜிசி உயர்மட்டக் குழுவின் பரிந்துரையின் அடிப்படையிலேயே வரும் கல்வி ஆண்டிற்கான நெறிமுறைகள், பல்கலை தேர்வுகள் கட்டமைப்பு உருவாக்கப்படும். தற்போதைய குழுவின் பரிந்துரைகளை மத்திய அரசு ஆய்வு செய்யும்.
அதன்பிறகு, உச்சநீதிமன்றத்தில் விளக்கமளித்து,
மருத்துவம் மற்றும் இன்ஜினியரிங் படிப்புகளுக்கான அட்மிஷனை நீட்டிப்பு செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வழக்கமாக மருத்துவப் படிப்புகளுக்கான அட்மிஷன் ஆக. 31ம் தேதியும், பொறியியல் படிப்புகளுக்கான அட்மிஷன் ஆக. 15ம் தேதியும் முடிவடையும் என்பது குறிப்பிடத்தக்கது.
தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459