ஈக்கள்.....மனித கழிவு.....அமிதாப்பச்சன் வீடியோ! #corona வதந்திகளும் விசாரித்த உண்மையும்..... - ஆசிரியர் மலர்

Latest

27/03/2020

ஈக்கள்.....மனித கழிவு.....அமிதாப்பச்சன் வீடியோ! #corona வதந்திகளும் விசாரித்த உண்மையும்.....

`

கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களை இந்த மருந்து குணப்படுத்தும்… அந்த மருந்து குணப்படுத்தும்’ என்பன போன்ற தகவல்கள் சமூக வலைதளங்களில் கொட்டிக்கிடக்கின்றன. இவற்றில் எந்தத் தகவலையும் முழுமையாக நம்ப முடியாத சூழலே இருக்கிறது. குறிப்பாக கொரோனா பரவல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நாடு முழுவதும் 21 நாள்கள் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு இப்படி அசாதாரண சூழல் நிலவுகையில் இதுபோன்ற தகவல்கள் ஆபத்தை அதிகரிக்கக் கூடும்.
இதில், நாம் கவனமாக இருக்க வேண்டும். அப்படியாக பரப்பப்படும் தகவல்களின் உண்மைத் தன்மை குறித்து அறிய களமிறங்கினோம்.

அப்படி நாம் எடுத்துக்கொண்டது, `ஈக்களாலும் கொரோனா பரவலாம்’ என்று கூறப்பட்ட தகவலை. இது, சமூக வலைதளங்களில் உலவும் யாரோ ஒருவர் சொன்ன தகவல் கிடையாது. இந்தியாவின் மூத்த நடிகர்களுள் ஒருவரான பாலிவுட்டின் அமிதாப் பச்சன் சொன்னது இது. இதற்காக அவர் சமீபத்தில் வெளியான லேன்சட் இதழின் ஆய்வை அவர் மேற்கோள் காட்டினார். இதுதொடர்பாக அவர் வெளியிட்ட 2 நிமிட வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. ட்விட்டரில் அவரது பதிவை பிரதமர் மோடி உள்பட லட்சக்கணக்கானோர் ரீ-ட்வீட் செய்தனர்.
அந்த வீடியோவில் அமிதாப் பச்சன், “ இன்று மிக முக்கியமான விஷயம் குறித்து உங்களிடம் பேச இருக்கிறேன். கொரோனா வைரஸுக்கு எதிராக நமது நாடு போராடிக்கொண்டிருக்கிறது. அதில், உங்களுக்கு மிக முக்கியமான பங்கு இருக்கிறது. மனிதக் கழிவுகளில் கொரோனா வைரஸால் பல வாரங்கள் உயிர்வாழ முடியும்
என சீனாவில் ஆய்வாளர்கள் கண்டுபிடித்திருப்பது உங்களுக்குத் தெரியுமா? பாதிக்கப்பட்டவர் இந்த வைரஸ் தாக்குதலில் இருந்து முழுமையாகக் குணமடைந்தாலும், அவரது கழிவுகளில் வைரஸ் இருப்பதற்கான வாய்ப்புகள் அதிகம்.


கொரோனா

மனிதக் கழிவுகளில் அமரும் ஈக்கள், அதன்பின்னர் உணவுப் பொருள்கள் மீது வந்தமர்ந்தால் அதன்மூலம் கொரோனா வைரஸ் பரவ வாய்ப்பிருக்கிறது. இதுதொடர்பாக நடத்தப்பட்ட ஆய்வில், பாதிக்கப்பட்டவர்களின் சளி உள்ளிட்ட மாதிரிகளைவிட கழிவுகளில் கொரோனா வைரஸ் அதிக காலம் உயிர் வாழ்வதாக ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்’’ என்று அமிதாப் பச்சன் கூறியிருந்தார்.
கொரோனா தடுப்பு நடவடிக்கை மற்றும் முன்னெச்சரிக்கையாக அவர் இந்த வீடியோவை ட்விட்டரில் வெளியிட்டிருந்தார். சுமார் 40.7 மில்லியன்
ஃபாலோயர்ஸ்கள் கொண்ட அமிதாப், கொரோனா தொடர்பாக கூறிய இந்தத் தகவலில் உண்மையில்லை என பல்வேறு தரப்பிலும் மறுப்பு தெரிவிக்கப்பட்டு வருகிறது.

அமிதாப் பச்சன்

இதில் உண்மையில்லை என மத்திய சுகாதாரத் துறையும் மறுப்பு தெரிவித்திருக்கிறது. இதுகுறித்து பேசிய சுகாதாரத் துறை இணைச் செயலாளர் லவ் அகர்வால், `அந்த ட்வீட்டை நான் பார்க்கவில்லை. ஆனால், இது மனிதரிடமிருந்து மனிதருக்குப் பரவும் தொற்று நோய். ஈக்கள் மூலம் இது பரவ வாய்ப்பில்லை’’ என்று மறுப்பு தெரிவித்தார். ஏற்கெனவே, சுய ஊரடங்கு உத்தரவின்போது எழுப்பப்பட்ட ஒலி, கொரோனா வைரஸைக் கொல்லும் என்று அமிதாப் பச்சன் கூறியிருந்தது விமர்சனங்களை ஏற்படுத்தியிருந்தது.


இதுகுறித்து சூழலியலுக்கான மருத்துவர்கள் சங்கத்தைச் சேர்ந்த மருத்துவர் புகழேந்தியிடம் பேசினோம். “மனிதக் கழிவுகளில் கொரோனா வைரஸ் இருப்பது பல்வேறு ஆய்வுகளில் உறுதி செய்யப்பட்டிருக்கிறது. அதனால்தான், சளி உள்ளிட்ட Respiratory மாதிரிகளில் வைரஸ் தொற்று இல்லை என்று முடிவுகள் வந்தாலும் `Anal Swap’ முறையில் எடுக்கப்படும் மாதிரிகளில் பாசிடிவ் என முடிவுகள் வருகின்றன.
ஆனால், அதிலிருந்து ஈக்கள் மூலம் பரவுமா என்ற கேள்விக்கு இதுவரை உறுதியான விடை எந்த ஆய்வின் மூலமும் கண்டுபிடிக்கப்படவில்லை. ஈக்களால் பரவும் என்றோ… பரவாது என்றோ உறுதியாக இப்போது நம்மால் சொல்ல முடியாது. தற்போது வரையுள்ள ஆய்வு முடிவுகளில் இது உறுதியாகச் சொல்லப்படவில்லை.

மருத்துவர் புகழேந்தி

ஹாங்காங்கில் மனிதரிடமிருந்து நாய்க்கு வைரஸ் தொற்று ஏற்பட்டதைப் பார்த்தோம். வைரஸ் தொற்று என்பது விலங்குகளிடம் இருந்து மனிதர்களுக்கு ஏற்பட்டிருக்கிறது. ஆனால், முதல்முறையாக மனிதர்களிடமிருந்து விலங்குக்கு இது பரவியிருக்கிறது. முதலில் இந்த வைரஸ் பாம்பிலிருந்து வந்தது
என்றார்கள்; பின்னர் எறும்புத்திண்ணிகளிடமிருந்து பரவியது என்றார்கள். ஆனால், இதையும் தற்போது மறுத்திருக்கிறார்கள். எனவே, ஈக்கள் மூலம் பரவும் என்ற முடிவுக்கு நாம் இப்போது வந்துவிட முடியாது. அதேநேரம், ஈக்கள் பரவ வாய்ப்பே இல்லை என்ற முடிவிலும் உறுதியாக இருக்க முடியாது. இதுகுறித்து விரிவான ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்ட ஒரு தீர்க்கமான முடிவுக்கு வர வேண்டும்’’ என்றார்.
தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459