அரசு பள்ளியில் படித்து, ‘நீட்’ தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு, உள் ஒதுக்கீடு - ஆசிரியர் மலர்

Latest

 




22/03/2020

அரசு பள்ளியில் படித்து, ‘நீட்’ தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு, உள் ஒதுக்கீடு


அரசு பள்ளியில் படித்து, ‘நீட்’ தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு, உள் ஒதுக்கீடு கொடுக்க வகை செய்யும், சிறப்பு சட்டத்தை இயற்ற  அரசு பரிசீலித்து வருவதாக சட்டப்பேரவையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.
சட்டசபையில், 110 விதியின் கீழ் முதலமைச்சர் பழனிசாமி, சில அறிவிப்புகள் வெளியிட்டார். அதில், தமிழகம் முழுவதும் உள்ள, மருத்துவக் கல்லுாரிகளில், மாணவர்கள் சேர, ‘நீட்’ நுழைவுத் தேர்வு முறை, 2016 – 17ம் ஆண்டில், மத்திய அரசால் அறிமுகப்படுத்தப்பட்டது. ஜெயலலிதாவின் தீவிர முயற்சியால் தமிழகத்திற்கு நீட் தேர்விலிருந்து, அந்த ஆண்டு விதிவிலக்கு வழங்கப்பட்டது. தமிழக அரசும், பொது மக்களும், நீட் தேர்வை கடுமையாக எதிர்த்து வருகிறோம். 2017 ஜன., 31ல், நீட் தேர்வை எதிர்த்து சட்ட மசோதா நிறைவேற்றி, மத்திய அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. உச்ச நீதிமன்றத்தில்வழக்கும் தொடரப்பட்டுள்ளது.
நீட் தேர்வை அறிமுகப்படுத்திய பின் அதில் தேர்ச்சி பெற்று தமிழகத்தில் உள்ள மருத்துவக் கல்லுாரிகளில் சேரும் அரசு பள்ளி மாணவர்களின் எண்ணிக்கை குறைந்து விட்டது. இந்நிலை, வரும் ஆண்டுகளில் தொடரக்கூடாது என்பதில், அரசு உறுதியாக உள்ளது. இப்பிரச்னைக்கு தீர்வு காண உச்ச நீதிமன்றத்தில் அரசு சட்டப் போராட்டம் நடத்தி வருகிறது.
இது மட்டுமின்றி, அரசு பள்ளிகள், மாநகராட்சி பள்ளிகள், நகராட்சி பள்ளிகள், ஆதிதிராவிடர், பழங்குடியினர் நலப்பள்ளிகள், கள்ளர் சீர் மரபின பள்ளிகள். மேலும், வனத்துறை பள்ளிகள் ஆகியவற்றில், முதல் வகுப்பு முதல், பிளஸ் 2 வரை படித்து, நீட் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு, பிரத்யேகமாக உள் ஒதுக்கீடு கொடுக்க வகை செய்யும், சிறப்பு சட்டம் இயற்ற, அரசு பரிசீலித்து வருகிறது. இச்சட்டத்தை இயற்ற தேவைப்படும், அனைத்து புள்ளிவிபரங்களையும் தொகுத்து, உரிய பரிந்துரையை அரசுக்கு வழங்க, உயர் நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில், ஆணையம் அமைக்கப்படும்.
அந்த ஆணையத்தில், பள்ளிக்கல்வி, சுகாதாரத்துறை, சட்டத்துறை அரசு செயலர்கள், பள்ளிக் கல்வித் துறையால் நியமிக்கப்படும், இரண்டு கல்வியாளர்கள், உறுப்பினர்களாக இருப்பர். மருத்துவக் கல்வி இயக்குனர், ஆணையத்தின் உறுப்பினர் செயலராக செயல்படுவார். இந்த ஆணையம் அரசு பள்ளி மாணவர்கள் மருத்துவப் படிப்புகளில் குறைந்த அளவிலேயே சேருவதற்கான காரணங்களை ஆராய்ந்து அவர்களின் சமூகப் பொருளாதார நிலையை மதிப்பீடு செய்யும். பின், அதை சரி செய்ய, அரசு எடுக்க வேண்டிய நடவடிக்கைகளை பரிந்துரை செய்யும். ஒரு மாதத்திற்குள் இப்பரிந்துரையை அரசுக்கு ஆணையம் சமர்பிக்கும் என்றும் முதலமைச்சர் பழனிசாமி கூறினார்.  

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459