உறுப்புக் கல்லுரிகள், வருடாந்திர ஆய்வுக்கு தலா 10 ஆயிரம் : பல்கலைக்கழகம் பிறப்பித்த சுற்றறிக்கைக்கு தடை - ஆசிரியர் மலர்

Latest

 




15/03/2020

உறுப்புக் கல்லுரிகள், வருடாந்திர ஆய்வுக்கு தலா 10 ஆயிரம் : பல்கலைக்கழகம் பிறப்பித்த சுற்றறிக்கைக்கு தடை

உறுப்புக் கல்லுரிகள், வருடாந்திர ஆய்வுக்கு ஒவ்வொரு பாடப்பிரிவுக்கும் தலா 10 ஆயிரம் செலுத்தி பதிவு செய்ய வேண்டும் என திருவள்ளுவர் பல்கலைக்கழக பதிவாளர் பிறப்பித்த சுற்றறிக்கைக்கு இடைக்கால தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தில் இணைப்பு பெற்ற கல்லூரிகள், வருடாந்திர ஆய்வுக்கு ஆன்லைனில் பதிவு செய்ய வேண்டும் எனவும், ஆய்வு கட்டணமாக ஒவ்வொரு பாடப்பிரிவுக்கும் தலா 10 ஆயிரம் ரூபாயும், 18 சதவீத ஜிஎஸ்டி வரியும் செலுத்த வேண்டும் எனவும், பல்கலைக்கழக பதிவாளர் கடந்த ஜனவரி 24 ஆம் தேதி அனைத்து கல்லூரி முதல்வர்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பினார்.
அதேபோல, ஆய்வுக்கு பதிவு செய்யாத கல்லூரிகள் 2020 – 21ம் கல்வி ஆண்டுக்கு பாடப்பிரிவுகளுக்கு அனுமதி வழங்கப்பட மாட்டாது எனவும் சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த சுற்றறிக்கைக்கு தடை விதிக்க வேண்டும் என்றும், அதை ரத்து செய்ய வேண்டும் எனவும், திருவள்ளுவர் பல்கலைக் கழக ஆட்சி மன்றக் குழு உறுப்பினர்கள் மரிய அந்தோணி ராஜ் உள்ளிட்ட 3 பேர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.
அவர்கள் தங்கள் மனுவில், ஆய்வுக் கட்டணம் வசூலிப்பதன் மூலம், கல்லூரிகள் தங்கள் கட்டணங்களை உயர்த்தும் எனவும் இதனால் மாணவர்கள் பாதிக்கப்படுவார்கள் எனவும் தெரிவித்திருந்தனர்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் பல்கலைக்கழகத்தின் சுற்றறிக்கைக்கு இடைக்கால தடைவிதித்து உத்தரவிட்டார்.
மேலும், மனுவுக்கு ஆறு வாரங்களில் பதிலளிக்க, பல்கலைக்கழக துணைவேந்தர் மற்றும் பதிவாளருக்கு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459